Wednesday 9 May 2012

தினப்படி/பண்டிகை தளிகை:

சர்க்கரைப் பொங்கல்

அரிசியை லேசான சூட்டில் வறுக்கவும். ஒரு பங்கு அரிசிக்கு... பாலும் தண்ணீரும் சேர்த்து நான்கு பங்கு என்ற அளவில் விட்டு, குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்தை பொடித்து தண்ணீர் விட்டு, சிறிது கொதித்தவுடன் வடிகட்டி, உருட்டும் பதம் வரும்வரை பாகு காய்ச்சவும். வேக வைத்த சாதத்துடன் பாகு சேர்த்து... வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். உலர்ந்த திராட்சையை சிறிதளவு நெய்யில் வறுத்துப் போடவும்.

வெண் பொங்கல்

பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அரிசியுடன் பாசிப்பருப்பு சேர்த்து, நான்கு மடங்கு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக் கொண்டு, தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து, சிறிதளவு நெய்யில் வறுக்கவும். கறிவேப்பிலையையும் நெய்யில் வறுக்கவும். வேக வைத்த அரிசி - பருப்பு கலவையுடன் வறுத்த முந்திரி, வறுத்த மிளகு - இஞ்சி, உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மீதமுள்ள நெய் சேர்க்கவும்.

கீரை வடை

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, வடிகட்டி... இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியான மாவாக அரைக்கவும். கீரையை நன்கு கழுவி, பொடி யாக நறுக்கி, சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கி, மாவுடன் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

புளி பொங்கல்

அரிசியை உப்புமா ரவை போல உடைத்துக் கொள்ளவும். புளியை நன்கு கரைத்துக் கொள்ளவும். குக்கரில் நல்லெண்ணெய் விட்டு... கடுகு, கிள்ளிய மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மஞ்சள்தூள் சேர்த்து தாளிக்கவும். புளித் தண்ணீருடன் நான்கு மடங்கு தண்ணீர் கலந்து இதில் விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன், உடைத்து வைத்து இருக்கும் அரிசி ரவையை தூவிக் கிளறி, குக்கரை மூடி வெயிட் போட்டு, நான்கு விசில் வந்ததும் இறக்கவும்.

மசால் வடை

கடலைப்பருப்பு, துவரம்பருப்பை (2:1) ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீரை வடித்துக் கொள்ளவும். தோல் சீவி, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாயை பருப்புடன்  சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக் கிய கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு பிசையவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு வேகவிட்டு எடுக்க வும்.


தயிர் வடை

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தோல் சீவி நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, மிளகு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக மிக்ஸியில் அரைக்கவும். மாவை நன்கு பிசையவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் கெட்டியான தயிரைக் கொட்டி வைக்கவும். லேசாக சூடாக்கிய தண்ணீரில் வடைகளை போட்டு, உடனே எடுத்து தயிரில் போட்டு, ஒரு பெரிய பிளேட்டில் பரவலாக வைக்கவும். மேலே கொத்தமல்லி,  கேரட் துருவல் போட்டு அலங்கரிக்கவும்.

தக்காளிக்காய் கூட்டு 

பயத்தம் பருப்பை முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும். தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது நீர்விட்டு மூடி வேகவைக்கவும்.
முக்கால் பதம் வெந்ததும் அரைத்த விழுது, வேகவைத்த பயத்தம் பருப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

முள்ளங்கி பயத்தம்பருப்புக் கறி

பயத்தம் பருப்பைக் கழுவி, நீரில் பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். அந்த நேரத்தில் முள்ளங்கியை (தேவைப்பட்டால்) தோலைச் சீவிக் கொண்டு, கேரட் துருவியில் பெரிய அளவாகத் துருவிக் கொள்ளவும். துருவிய முள்ளங்கியுடன் நீரை வடித்த பயத்தம் பருப்பு, உப்பு(கவனம்: முள்ளங்கி சுண்டி, அளவில் குறையும்.) சேர்த்துப் பிசிறி பத்து நிமிடங்கள் வைக்கவும். அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு,காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம் தாளிக்கவும் கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து, அடுப்பை நிதானமான சூட்டில் வைத்து, முள்ளங்கிக் கலவையையும் சேர்த்துக் கிளறி, மூடிவைக்கவும். தண்ணீர் சேர்க்கவேண்டாம்.
ஒன்றிரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை திறந்து கிளறிவிட்டு, முள்ளங்கி வெந்து நீர்வற்றியதும் தேங்காய்த் துருவல், நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். (சுமார் 5, 6 நிமிடங்களிலேயே முடிந்துவிடும்.)
* முள்ளங்கி தவிர, கேரட், கோஸ் போன்ற காய்களிலும் இந்த முறையில் கறி செய்யலாம்.

வெண்டைக்காய் ஃப்ரை

வெண்டைக்காயைக் கழுவி, நன்றாக மேல் ஈரம் காயவிட்டு, சிறிய வட்டங்களாகவோ அல்லது நீளமாக குறுக்கிலோ நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து வெண்டைக்காயைச் சேர்க்கவும்.
உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தயிர் சேர்த்துப் பிரட்டிவிட்டு, சிம்மில் வைத்து மூடிவைக்கவும். அவ்வப்போது திறந்து கிளறிவிட்டு மீண்டும் மூடவும்.
அரைப் பதம் வெந்ததும், கடலை மாவு தூவி, திறந்துவைத்தே வேகவைக்கவும்.
அடிப்பிடிக்காமல் மெதுவாக அவ்வப்போது திருப்பிவிட்டு, முக்கால் பதம் வெந்ததும் இறக்கவும்


மோர் குழம்பு 

துவரம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். எடுத்துக் கொண்டிருக்கும் காயை முக்கால் பதம் வேகவைத்துக் கொள்ளவும். ஊறவைத்த பருப்புகள், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், மல்லி விதை, சீரகம் எல்லாவற்றையும் சிறிது நீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். தயிரை நன்கு கட்டியில்லாமல் கடைந்து, தேவையான உப்பு, மஞ்சள் தூள், அரைத்த விழுது, வேகவைத்த காய் சேர்த்து நிதானமான தீயில் அடுப்பில் சூடாக்கவும். ஒன்றிரண்டு முறை மட்டும் கிளறி விடவும். பொங்கி வரும்போது தாமதிக்காமல் அடுப்பிலிருந்து இறக்கி, மல்லித் தழை சேர்க்கவும். தேங்காயெண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.

குழம்பு :


புளியை நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் எண்ணையில் காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை என்ற வரிசையில் வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த பொருள்களுடன் தேங்காயை வைத்து அரைத்துக் கொள்ளவும்.
புளித் தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்கவும். அரைத்த விழுதையும் சேர்த்து மேலும் கொதிக்க வைத்து இறக்கவும்.



பேபிகார்ன் மஞ்சூரியன்

தேவையானவை: பேபிகார்ன் - ஒரு பாக்கெட், மைதா மாவு - அரை கப், கார்ன்ஃப்ளார் - அரை கப், சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், சில்லி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய வெங்காயத் தாள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பேபிகார்னை தோலுரித்து, குறுக்காக 'ஸ்லைஸ்'ஸாக்கவும். எண்ணெய், வெங்காயத்தாள் நீங்கலாக அனைத்துப் பொருட்களையும் அதனுடன் சேர்த்து, தண்ணீர் தெளித்துப் பிசறவும். கடாயில் எண்ணெய் விட்டு, மசாலா சேர்த்த பேபிகார்னை போட்டுப் பொரித்தெடுக்கவும். வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.

பனீர் பரோட்டா


தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், மைதா - அரை கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. பனீர் ஸ்டஃப்பிங்குக்கு: பனீர் துருவல் - ஒரு கப், துருவிய வெங்காயம் - அரை கப், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - கால் கப், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.செய்முறை: கோதுமை மாவு, மைதாவுடன் உப்பு, நெய், தேவையான தண்ணீர் சேர்த்து மிருதுவாகப் பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, துருவிய வெங்காயத்தை பிழிந்து சேர்த்து வதக்கவும். அதில் பனீர் துருவல், மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, ஒவ்வொரு உருண்டையையும் கிண்ணம் போல் செய்யவும். அவற்றில் சிறிது பனீர் கலவையை வைத்து மூடி, பரோட்டாக்களாகத் தேய்க்கவும். தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

கோபி 65

தேவையானவை: காலிஃப்ளவர் - 1, மைதா மாவு - அரை கப், கார்ன்ஃப்ளார் - அரை கப், இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது - தலா 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், காய்ந்த வெந்தயக்கீரை - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக நறுக்கவும். அதை, உப்பு சேர்த்த தண்ணீரில் அரை மணி நேரம் ஊற விட்டுக் கழுவவும். அதனை ஒரு தட்டில் பரப்பி, அதன் மீது எண்ணெய் தவிர்த்து மற்ற பொருட்களைப் போட்டு, சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசறவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசறி வைத்துள்ள காலிஃப்ளவரை சிறிது சிறிதாகப் போட்டுப் பொரித்தெடுத்தால்... சூடான கோபி 65 ரெடி!

சாம்பார் வடை


தேவையானவை: உளுந்து, துவரம்பருப்பு - தலா ஒரு கப், வெங்காயம் (நறுக்கியது) - ஒரு கப், தக்காளி - 4, புளி - ஒரு எலுச்சம்பழம் அளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.வறுத்து அரைக்க: காய்ந்த மிளகாய் - 6, தனியா - ஒன்றரை டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன். தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2. செய்முறை: உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நன்கு கழுவி அரைக்கவும். அவ்வப்போது தண்ணீர் தெளித்து அரைத்து எடுத்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். துவரம்பருப்பை, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து மசிக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை வெறும் கடாயில் சிவக்க வறுத்து அரைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் தாளித்து... வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்கவும். அதில் நறுக்கிய தக்காளியோடு, உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றையும் சேர்த்து கரையும் வரை வதக்கி, கரைத்து வடிகட்டிய புளித் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். பின்பு அதில் மசித்த பருப்பு, அரைத்து வைத்திருக்கும் தனியா மசாலா, தேவையான தண்ணீர் சேர்த்து கலக்கி கொதிக்க விடவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்தால் மணக்கும் சாம்பார் ரெடி. கடாயில் எண்ணெய் விட்டு உளுந்து மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்தெடுத்கவும். உடனே அதனை சாம்பாரில் போட்டெடுத்து, ட்ரேயில் அடுக்கவும். பரிமாறுவதற்கு முன், சூடான சாம்பாரை மேலே ஊற்றி... நெய் விட்டுப் பரிமாறவும்.

சன்னா மசாலா


தேவையானவை: சன்னா - ஒரு கப், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், தக்காளிச் சாறு - ஒரு கப், புளி விழுது - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.மசாலாவுக்கு: வெங்காயம் - 2, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 6 பல், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்.செய்முறை: சன்னாவை 6-8 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் குழையாமல் வேக விடவும். மசாலாவுக்கு கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதில் தக்காளிச் சாறு, புளி விழுது, வேக வைத்த சன்னாவிலுள்ள தண்ணீர் சேர்த்து 2-3 நிமிடம் கொதிக்க வைத்து... அதில் சன்னாவை சேர்க்கவும். ஒருமுறை கொதித்ததும், அதனுடன் உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து மீண்டும் 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். இறக்குவதற்கு முன், கொத்தமல்லி தூவி இறக்கிப் பரிமாறவும்.

தால் மக்னி


தேவையானவை: உளுந்து, ராஜ்மா - தலா கால் கப், வெங்காயம் - 2, தக்காளி - 3, பட்டை - சிறிய துண்டு, கிராம்பு - 2, ஏலக்காய் - 2, பிரிஞ்சி இலை - சிறியது, தனியாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒன்றரை டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன், வெண்ணெய், ப்ரெஷ் க்ரீம் - தலா 2 டீஸ்பூன், காய்ந்த வெந்தய இலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: உளுந்து, ராஜ்மாவை முதல்நாள் இரவே ஊற வைத்து சுத்தப்படுத்தவும். குக்கரில் ஊறிய பயறுகளை குழையாமல் வேக விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்கவும். வெங்காயம், தக்காளியை விழுதாக அரைத்து அதனுடன் சேர்க்கவும். கொஞ்சம் வதங்கியவுடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பின்பு மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கவும். கிரேவியாக வந்ததும், வேக வைத்த உளுந்து, ராஜ்மா உப்பு சேர்த்துக் கிளறவும். கொதித்து வரும்போது, காய்ந்த வெந்தய இலை, வெண்ணெய், க்ரீம் சேர்த்துக் கிளறி இறக்கவும். இது சப்பாத்தி, நாண், தந்தூரி ரொட்டிக்கு ஏற்ற சைட் டிஷ். ராஜ்மா (அ) உளுந்து மட்டுமே பயன்படுத்தியும் செய்யலாம்.

மசால் தோசை


தேவையானவை: புழுங்கலரிசி - ஒன்றரை கப், பச்சரிசி, உளுந்து - தலா அரை கப், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ்பூன், எண்ணெய், வெண்ணெய், உப்பு - தேவையான அளவு. மசாலாவுக்கு: உருளைக்கிழங்கு - அரை கிலோ, வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3, நறுக்கிய இஞ்சி - ஒரு துண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன். எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்து, வெந்தயத்தை ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். அதனை நன்கு கழுவி, நைஸாக அரைத்து, உப்பு சேர்த்துப் புளிக்க வைக்கவும்.உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை மெல்லியதாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து... அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும், உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து கெட்டியாகக் கிளறவும். புளித்த மாவில் சர்க்கரை, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைக்கவும். தோசைக்கல்லில் மாவு விட்டு மெல்லிய தோசையாகத் தேய்த்து, நடுவில் சிறிது உருளைக்கிழங்கு மசாலா வைக்கவும். கூடவே ஒரு டீஸ்பூன் வெண்ணெய் வைத்து... தோசையைச் சுற்றிலும் எண்ணெய் விட்டு சற்று பொன்னிறமானதும் மடித்து எடுக்கவும்

வத்தக்குழம்பு


தேவையானவை: சின்ன வெங்காயம் (தோலுரித்தது) - 1 கப், பூண்டு (தோலுரித்தது) - கால் கப், தக்காளி - 6, மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், தனியாத்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு, உப்பு - தேவையான அளவு.தாளிக்க: கடுகு - 1 டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, எண்ணெய் - அரை கப், கறிவேப்பிலை - சிறிதளவு.அரைக்க: தேங்காய் துருவல் - கால் கப், முந்திரி - 6.செய்முறை: வெங்காயம், பூண்டு ஆகியவற்றை ஒன்றிரண்டாக நசுக்கவும். தக்காளியைக் கையால் நன்கு மசித்துக் கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து, நசுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு சேர்க்கவும். பிறகு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதங்கியதும், தக்காளி, உப்பு, மஞ்சள்தூளை சேர்த்து, தக்காளி கரையும் வரை வதக்கவும். பிறகு, புளிக் கரைசல், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு கொதிக்க வைத்து அதில் அரைத்த தேங்காய் - முந்திரி விழுதைச் சேர்க்கவும். ஒருமுறை கொதிக்க வைத்து, இறக்கிப் பரிமாறவும்.

வெள்ளை குருமா


தேவையானவை: காய்கறி கலவை - 2 கப் (உதாரணத்துக்கு பீன்ஸ், கேரட், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு) கறிவேப்பிலை - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு.அரைக்க: தேங்காய் துருவல் - ஒன்றரை கப், சோம்பு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 4 பல், பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று, பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி - 10, எண்ணெய் தேவையான அளவு. செய்முறை: காய்கறிகளை சிறு சதுர துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைக்க கொடுத்துள்ளவற்றைப் போட்டு வதக்கவும். வதங்கியதும், இறக்கி ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அரைத்த விழுதில் தண்ணீர் கலந்து கலக்கி, வெந்த காய்கறியுடன் சேர்க்கவும். அதில் உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து, இறக்கவும். நெய்யில் கறிவேப்பிலை தாளித்துக் கொட்டிப் பரிமாறவும்.

நாண்


தேவையானவை: மைதா மாவு - 2 கப், பால் - அரை கப், தயிர் - கால் கப். ஈஸ்ட் - ஒன்றரை டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: மைதாவுடன் நெய், உப்பு சேர்த்துக் கலக்கவும். பாலை வெது வெதுப்பாக சூடாக்கி, அதில் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்துக் கலந்து... மூடி வைக்கவும். 3 நிமிடம் கழித்து அதனுடன் தயிர் சேர்க்கவும். 10 நிமிடம் கழித்து, அது நுரைத்து வந்ததும், அதை மாவுடன் சேர்த்து மிருதுவாகப் பிசையவும். இதனை பாத்திரத்தில் போட்டு கதகதப்பாக உள்ள இடத்தில் மூடி வைக்க... மாவு 2 மடங்காகப் பொங்கி வரும். அதில், சிறிதளவு மாவு எடுத்து 'நாண்' போல் தேய்க்கவும். வெறுமனே காய்ந்த தோசைக்கல்லில் நாணை போட்டு இருபுறமும் ஒரு முறை திருப்பிப் போட்டு, ரொட்டி வலையில் வைத்து நேரடியாக மிதமான தீயில் காட்டவும். அதைப்போல் இருபுறமும் செய்து எடுத்து, மேலே எண்ணெய் தடவி பரிமாறவும்.
ஃப்ரூட் - நட் ரவா தோசை


தேவையானவை: ரவை - அரை கப், அரிசி மாவு - ஒன்றரை கப், மைதா மாவு - கால் கப், முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, திராட்சை (பொடியாக நறுக்கிக் கலந்தது) - அரை கப், மிளகு (பாதியாக நசுக்கியது) - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி (நறுக்கியது) - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ரவை, அரிசி மாவு, மைதா மாவு மூன்றையும் ஒன்றாகக் கலக்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். முந்திரி உள்ளிட்ட மற்ற பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து சூடான தோசைக்கல்லில் பரப்பி, அதன் மேல் தோசை மாவை விட்டு, மிதமான தீயில் வேக விடவும். தோசையைச் சுற்றிலும் எண்ணெய் விட்டு சிறிது நேரம் கழித்து, மடித்து எடுக்க... டெலிஷியஸ் ஃப்ரூட் - நட் ரவா தோசை ரெடி! இதேபோல ஒவ்வொரு தோசையையும் சுட்டு எடுக்கவும்.
பனீர் பட்டர் மசாலா


தேவையானவை: பனீர் - 200 கிராம், குடமிளகாய் - 1, காய்ந்த வெந்தயக்கீரை - 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், தக்காளி - 4, முந்திரி விழுது - 2 டேபிள்ஸ்பூன், ப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.அரைக்க: வெங்காயம் - 3, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 6 பல், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்.செய்முறை: பனீர், குடமிளகாயை சதுரத் துண்டுகளாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். தக்காளியைத் தனியாக அரைக்கவும். கடாயில் வெண்ணெய் விட்டு உருக்கி, அரைத்த வெங்காய விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். குடமிளகாயை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த தக்காளியைச் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு பனீரைப் பொரித்து, தண்ணீரில் போடவும். 5 நிமிடம் கழித்து அதை எடுத்து, அந்த மசாலாவில் சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு, அதில் முந்திரி விழுது, கரம் மசாலாத்தூள், காய்ந்த வெந்தயக்கீரை, உப்பு சேர்த்துக் கலந்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி, ப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.

புருக்கோலி சூப்


தேவையானவை: புருக்கோலி (அ) பச்சை ஃப்ளவர், உருளைக்கிழங்கு, வெங்காயம் - தலா 1, பால் - ஒரு கப், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், சீவிய பாதாம் - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: புருக்கோலியை சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக்கி, குக்கரில் போட்டு 2 கப் தண்ணீர் விட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும். ஆறவைத்து அதில் புருக்கோலி சேர்த்து மீண்டும் 3 நிமிடம் குக்கரில் வைத்துக் கொதிக்க விடவும். பின்பு, குக்கரை இறக்கி பாதியளவு புருக்கோலியை தனியே எடுத்து வைக்கவும். மீதியுள்ள அனைத்தையும் ஆற வைத்து நன்கு அரைத்து, பால் சேர்த்துக் கொதிக்க விடவும். அதனை இறக்கி உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். கடாயில், வெண்ணெய் விட்டு, உருக்கி பாதாம் சேர்த்து சிவக்க வறுத்து... சூப்புடன் சேர்க்கவும். எடுத்து வைத்துள்ள புருக்கோலித் துண்டுகளை சேர்த்துப் பரிமாறவும்.

காய்கறி பாயா


தேவையானவை: கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, காலிஃப்ளவர் (கலந்தது) - 2 கப், வெங்காயம் - 2, எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், முதலாவது தேங்காய்ப் பால் - ஒரு கப், இரண்டாவது தேங்காய்ப் பால் - 2 கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.அரைக்க: பச்சை மிளகாய் - 5, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 6 பல், தனியாத்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், முந்திரி - 10, பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 1, கொத்தமல்லி - சிறிதளவு.செய்முறை: காய்களைத் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். அதில் நறுக்கிய காய்கறி, அரைத்த மசாலா விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி, இரண்டாம் தேங்காய்ப் பால் விட்டு 3 நிமிடம் கொதிக்க விடவும். அதனுடன், உப்பு, முதலாவது தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி, கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் இறக்கி, நறுக்கிய கொத்தமல்லி தூவி, எலுமிச்சைச் சாறு விட்டுப் பரிமாறவும்.
சோலாபூரி


தேவையானவை: மைதா மாவு - 2 கப், பால் - அரை கப், தயிர் - கால் கப், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: மைதா மாவுடன் பால், தயிர், சமையல் சோடா, நெய், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும். அரை மணி நேரம் ஊற வைத்து, சற்று கனமான பெரிய பூரிகளாகத் தேய்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, தேய்த்த பூரிகளை அதில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுத்தால்... சோலா பூரி தயார்!
இதற்கு சென்னா மசாலா சூப்பர் சைட் டிஷ்.

பாசந்தி


தேவையானவை: பால் - 2 லிட்டர், சர்க்கரை - ஒன்றரை கப், சீவிய பாதாம் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்.செய்முறை: அகலமான பாத்திரத்தில் பாலை நன்கு காய்ச்சவும். பால் பொங்கியதும், மிதமான தீயில் பாலைக் கொதிக்க விடவும். பால் கொதிக்கும்போது படியும் பாலடையை கரண்டியால் சேகரித்து, வேறொரு பாத்திரத்தில் போடவும். பால் கால் பங்காக வற்றியதும் அதில் சர்க்கரை சேர்த்து தீயை அதிகரித்துக் கொதிக்க விடவும். கொஞ்ச நேரம் கொதித்ததும், எடுத்து வைத்த பாலாடைகளை அதில் சேர்க்கவும். அதனை, 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி அதில் பாதாம், ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து... ஆற வைத்து, ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.
வெஜிடபிள் நூடுல்ஸ்


தேவையானவை: நூடுல்ஸ் - 3 பாக்கெட், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், குடமிளகாய் (கலந்தது) - 2 கப், வெங்காயம் - 1, சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, வெங்காயத்தாள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.அரைக்க: பச்சை மிளகாய் - 6, பூண்டு - 6 பல். செய்முறை: ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். அதில் நூடுல்ஸைப் போட்டு... 2 நிமிடத்துக்குப் பிறகு வடிகட்டி, தண்ணீரில் அலசவும். அடுப்பில் தோசைக்கல்லை காய வைத்து, அலசிய நூடுல்ஸை பரப்பி, அதனைச் சுற்றிலும் கொஞ்சம் எண்ணெய் விட்டு 2 நிமிடம் கழித்துப் புரட்டி எடுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, அதில் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு தாளித்து இறக்கவும். இன்னொரு கடாயில், எண்ணெய் விட்டு அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அதனுடன், வெங்காயம், நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கி... சோயா சாஸ், உப்பு போட்டுக் கிளறி நூடுல்ஸ் சேர்க்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயத்தாள், தாளித்த மிளகாயைக் கொட்டி நன்கு கிளறிப் பரிமாறவும்.

கேஷ்யூ புலாவ்


தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், முந்திரி - கால் கப், வெங்காயம் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், பட்டை - 1 துண்டு, மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், சீரகத்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: பாசுமதி அரிசியை சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு, அடுப்பில் ஏற்றி உதிர் உதிராக வடித்து, ஆற விடவும். கடாயில் நெய், எண்ணெய் விட்டு, சீரகம், பட்டையை தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தை அதனுடன் சேர்த்து மிதமான தீயில் மொறுமொறுவென வறுத்த பின்பு மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வடித்த சாதத்தை மசாலா கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். முந்திரிப்பருப்பை நெய்யில் சிவக்க வறுத்து, சாதத்தில் கொட்டிக் கிளறவும்.

ஃப்ரைடு ரைஸ்


தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், குடமிளகாய் (கலந்தது) - 2 கப், நறுக்கிய வெங்காயம் - 1, நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு, சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - ஒன்றரை டீஸ்பூன், சர்க்கரை - 1 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, நன்கு கழுவி, அடுப்பில் ஏற்றி உதிர் உதிராக வடித்து ஆற விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, அதிக தீயில் புகையக் காயவிட்டு, பொடியாக நறுக்கிய காய்கறி கலவை, வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். அதனுடன் சோயா சாஸ், மிளகுத்தூள், சர்க்கரை, உப்பு சேர்த்து மீண்டும் ஒரு நிமிடம் கிளறவும். அந்தக் கலவையில் வடித்த சாதத்தை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதன் மேல் வெங்காயத்தாள் தூவி கிளறினால்... மணக்கும் ஃப்ரைடு ரைஸ் தயார்!

கொத்து பரோட்டா


தேவையானவை: பரோட்டா - 6, வெங்காயம் - 2, தக்காளி, பச்சை மிளகாய் - தலா 1, குருமா - அரை கப் (பரோட்டாவுக்காக தயாரிக்கும் குருமாவைப் பயன்படுத்தலாம்), கொத்தமல்லி - சிறிதளவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவுசெய்முறை: பரோட்டாவை சிறுசிறு துண்டுகளாக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும். மணம் வந்ததும், துண்டுகளாக்கிய பரோட்டா, குருமா, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்தால் டேஸ்ட்டி கொத்து பரோட்டா பரிமாறத் தயார்!

ஸ்பெஷல் வடை


தேவையானவை: உளுந்து - ஒரு கப், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா 2, இஞ்சி - ஒரு துண்டு, சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - 1 டேபிள்ஸ்பூன்.செய்முறை: உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கழுவி, தண்ணீரை வடிக்கவும். அதை கரகரப்பாக அரைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கவும். இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும். அவற்றை அரைத்த மாவுடன் சேர்த்து... பெருங்காயத்தூள், சீரகம், உப்பு போட்டுக் கலக்க வும். கடாயில் எண்ணெய் விட்டு, மெல்லிய வடைகளாகத் தட்டிப் போட்டு மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும்.

ரவா இட்லி


தேவையானவை: ரவை, தயிர் (புளிப்பில்லாதது) - தலா 1 கப், ஃப்ரூட் சால்ட் (பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - 1 டீஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு - 1 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 துண்டு, நறுக்கிய பச்சை மிளகாய் - 1, முந்திரி - 6.செய்முறை: கடாயில் எண்ணெய், நெய் இரண்டையும் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை சேர்த்து வதக்கி, அதனுடன் ரவையை சேர்க்கவும். மிதமான தீயில் வாசனை வரும்வரை வதக்கி... இறக்கி ஆற விடவும். ஆறிய ரவையுடன் தயிர், ஃப்ரூட்சால்ட், உப்பு, சிறிது தண்ணீர் விட்டு, இட்லிமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இட்லித் தட்டில் ஊற்றி. வெந்ததும் இறக்கிப் பரிமாறவும். இதற்கு கொத்தமல்லி சட்னி சூப்பர் காம்பினேஷன்.

மல்லி சட்னி


தேவையானவை: கொத்தமல்லி - 1 கட்டு, தேங்காய் துருவல் - அரை கப், பச்சை மிளகாய் - 3, புளி - நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பூண்டு (விருப்பப் பட்டால்) - 3 பல், எண்ணெய், உப்பு தேவையான அளவு.செய்முறை: கொத்த மல்லியை ஆய்ந்து, தண்ணீரில் அலசி நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கீறிய பச்சை மிளகாய், தேங்காய் துருவல், நறுக்கிய கொத்தமல்லி, புளி, பூண்டு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இறக்கி ஆற வைத்து, மிக்ஸியில் நைஸாக அரைக்க... வாசம் வீசும் மல்லி சட்னி ரெடி!

பாவ் பாஜி


தேவையானவை: பாவ் பன் - 2 , வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - அரை கப், நறுக்கிய கொத்தமல்லி - கால் கப்.மசாலாவுக்கு: வேக வைத்த உருளைக்கிழங்கு - 3, கேரட், முட்டை கோஸ், பீன்ஸ் (நறுக்கி வேக வைக்கவேண்டும். காய்கறி வெந்தபிறகு, அந்தத் தண்ணீரை தனியே எடுத்து வைக்கவேண்டும்) - ஒரு கப், வெங்காயம் - 2, தக்காளி - 3, பச்சை மிளகாய் 2, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு- 6 பல், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், பாவ் பாஜி மசாலா - 2 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, வெண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: மசாலாவுக்கான வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி,பூண்டு மூன்றையும் விழுதாக அரைக்கவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு, உருக்கி அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் அரைத்த விழுது, தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் வதக்கவும். பின்பு, மசித்த உருளைக்கிழங்கு, காய்கறியைப் போட்டுக் கிளறி, பாவ் பாஜி மசாலா சேர்த்து, வேக வைத்த காய்கறி தண்ணீர், கொத்தமல்லி சேர்த்து கிரேவி பதம் வந்ததும் இறக்கவும். இரண்டாக நறுக்கிய பன் மீது வெண்ணெய் தடவி, அடுப்பிலிருக்கும் தோசைக்கல்லில் வைத்தெடுத்து, ஒரு பிளேட்டில் சூடாக வைக்கவும். அதனுடன் மசாலா வைத்து, வெங்காயம், கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

காய்கறி சால்னா


தேவையானவை: கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, காலிஃப்ளவர் (கலந்தது) - கால் கிலோ, வெங்காயம் - 2, எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்ப் பால் - 2 கப், புதினா - ஒரு கைப்பிடி அளவு, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 6 பல், லவங்கம் - 2, பட்டை - 1, ஏலக்காய் - 2, சோம்பு - அரை டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், முந்திரி - 8, மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், தனியாத்தூள் - 1 டீஸ்பூன்.செய்முறை: காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி, பின்பு அரைத்த விழுதைச் சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதில் காய்கறிகளைச் சேர்க்கவும். காய்கறிகள் வதங்கியதும், உப்பு, பாதியளவு தேங்காய்ப் பால், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க வைக்கவும். இறக்குவதற்கு முன் மீதியுள்ள தேங்காய்ப் பால் சேர்த்துக் கலந்து, அதில் எலுமிச்சைச் சாறு விட்டுக் கலந்து பரிமாறவும்.

பாலக் பனீர்


தேவையானவை: பனீர் - 100 கிராம், பாலக் கீரை - ஒரு கட்டு, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 1, பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: சுத்தப்படுத்திய பாலக் கீரையை, வெந்நீரில் போட்டு 5 நிமிடம் மூடி வைக்கவும். வெங்காயத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கீரையை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, பனீரைப் போட்டு வதக்கி தனியே எடுத்து வைக்கவும். அதே கடாயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து, அரைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, அரைத்த பாலக் கீரை, உப்பு சேர்த்து... ஒருமுறை கொதிக்க விடவும். அப்போது, வதக்கிய பனீரை சேர்த்துக் கலக்கவும். பரிமாறுவதற்கு முன், எலுமிச்சைச் சாறு விட்டுக் கலக்கி பரிமாறவும்.
தயிர் வடை


தேவையானவை: உளுத்தம்பருப்பு - ஒரு கப், தயிர் (புளிப்பில்லாதது) - ஒன்றரை கப், பால் - முக்கால் கப், கேரட் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், காராபூந்தி - ஒரு கைப்பிடி அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு, அரைக்க: தேங்காய் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன்.செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கழுவி, நைஸாக அரைத்து, உப்பு சேர்த்துக் கலக்கி தனியே வைக்கவும்.ஒரு கப் தயிருடன், கால் கப் பால், உப்பு சேர்த்துக் கலக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்து... அதை அந்தத் தயிருடன் சேர்த்துக் கலக்கவும். கடுகை தாளித்து, அதில் கொட்டிக் குளிர வைக்கவும். மீதமுள்ள அரை கப் தயிர் மற்றும் அரை கப் பால் இரண்டுடன் அரை கப் தண்ணீர், சிறிது உப்பு கலந்து தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, வெந்ததும் எடுத்து அதை வெறும் பால், தயிர், தண்ணீர் கலவையில் முதலில் போடவும். 2 நிமிடம் அதை ஊற விட்டு, எடுத்து ட்ரேயில் அடுக்கவும். இதேபோல் எல்லா வடையையும் செய்து அடுக்கி.. அதன் மேல் தயிர் மசாலா கலவையை ஊற்றவும். பரிமாறுவதற்கு முன் அதன் மீது கேரட் துருவல், கொத்தமல்லி, காராபூந்தி தூவி பரிமாறவும்.
வெஜ் கபாப்


தேவையானவை: பிரவுன் நிற கொண்டைக்கடலை - கால் கப், சீரகம், மிளகு - தலா ஒரு டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, லவங்கம் - 2, பூண்டு - 2 பல், இஞ்சி - சிறிய துண்டு, வெங்காயம் - 1, பிரெட் - 2 ஸ்லைஸ், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவிடவும். ஊற வைத்த கடலையுடன் சீரகம், மிளகு, பட்டை, லவங்கம், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து குக்கரில் வேகவிட்டு, 4 விசில் வந்ததும் இறக்கவும். அதனை ஆற வைத்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிரெட் ஸ்லைஸை நீரில் நனைத்துப் பிழிந்து எடுத்து, அரைத்த கலவையுடன் எலுமிச்சைச் சாறு விட்டுக் கலந்து நன்கு பிசைந்து கொள்ளவும். அதை 'கபாப்'பாக உருட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, அதில் உருண்டைகளைப் போட்டுப் பொரித்து எடுக்கவும். இதை தோசைக்கல்லில் சுட்டும் எடுக்கலாம். பரிமாறும் தட்டில் கபாப்பை வைத்து புதினா, வெங்காயம் தூவி அலங்கரித்து, தக்காளி சாஸ§டன் பரிமாறவும்.

கடாய் பனீர்


தேவையானவை: மசாலாவுக்கு: காய்ந்த மிளகாய் - 5, சீரகம் - அரை டீஸ்பூன், தனியா - 2 டேபிள்ஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, கிராம்பு - 2, ஏலக்காய் - 2 (இவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்... கடாய் மசாலா ரெடி) பனீர் - 100 கிராம், வெங்காயம் - 2, தக்காளி - 2, இஞ்சி, பூண்டு (நசுக்கியது) - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பனீரை சதுரத் துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அதனை குளிர்ந்த நீரில் போட்டு தனியே எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி. நசுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்துக் கலக்கவும். இஞ்சி, பூண்டு வாசனை போனதும் கடாய் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, அதில் பொரித்து வைத்துள்ள பனீரை சேர்த்துக் கிளறி, லேசாக தண்ணீர் தெளிக்கவும். மசாலா எல்லாம் ஒன்றாகக் கலந்தும் இறக்கவும். இதேபோல் மஷ்ரூம் சேர்த்தும் செய்யலாம்.
மலாய் கோஃப்தா கிரேவி

தேவையானவை: கோஃப்தாவுக்கு: பனீர் - 100 கிராம், உருளைக்கிழங்கு (வேக வைத்தது) - 2, மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, கேரட் துருவல் - கால் கப், மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. கிரேவிக்கு: பெரிய வெங்காயம் - ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 3, தனியாத்தூள், கசகசா - தலா ஒரு டீஸ்பூன், தயிர் - கால் கப், முந்திரி - 10, தேங்காய் துருவல் - கால் கப், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை - கோஃப்தா: வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ளவும். அதனுடன் துருவிய பனீர், கேரட் துருவல், உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். மைதா மாவை அதனுடன் சேர்த்துப் பிசைந்து... சிறு உருண்டைகளாக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, உருண்டைகளைப் போட்டு பொரித்தெடுக்கவும்.கிரேவி: வெங்காயத்தை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கசகசா, முந்திரி, தேங்காய் துருவலை சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து... அரைத்த வெங்காய விழுதைச் சேர்த்து வதக்கியதும். இஞ்சி - பூண்டு விழுதை சேர்க்கவும். எல்லாம் கலந்ததும், அரைத்த தேங்காய் விழுது, தயிர் சேர்த்து நன்கு கிளறவும். பச்சை மிளகாய், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும், இறக்கவும். பரிமாறும் பாத்திரத்தில் கிரேவியை விட்டு, அதில் கோஃப்தாக்களைப் போட்டு, கொத்தமல்லி, க்ரீம் (தேவைப்பட்டால்) சேர்த்துப் பரிமாறவும்
தக்காளி வெஜிடபிள் சூப்

தேவையானவை: தக்காளி - 1, முட்டைகோஸ், கேரட் துருவல் - தலா 1 கப், வெண்ணெய் - 1 டீஸ்பூன், சோள மாவு அரை ஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு,செய்முறை: ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, துருவிய முட்டை கோஸ், கேரட்டைப் போட்டு வேக விடவும். வெந்தவுடன் அதனை வடிகட்டி காய்கறிகளை மசிக்கவும். வடிகட்டிய நீருடன் மிளகுத்தூள், உப்பு, வெண்ணெய் சேர்க்கவும். தண்ணீர் விட்டுக் கரைத்த சோள மாவையும், மசித்த காய்களையும் அதில் சேர்த்து, ஒருமுறை கொதிக்க விடவும். நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.குறிப்பு: 'பசியே எடுக்கல...' என்று கவலைப்படுபவர்களுக்கு ஏற்ற சூப் இது!

வெந்தய தோசை

தேவையானவை: புழுங்கல் அரிசி - 200 கிராம், வெந்தயம் - 4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அரிசி, வெந்தயம், உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஒன்றாக ஊற வைத்து, சுத்தம் செய்து அரைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து, புளிக்க விடவும். தோசைக்கல்லில் சிறிய தோசைகளாக வார்த்து, இரு-புறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.குறிப்பு: வெந்தயம் குளிர்ச்சி தந்து, உஷ்ணத்தைக் குறைக்-கும். வெந்தய தோசைக்கு புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி சிறந்த காம்பி-னேஷன்!

ஆரஞ்சுத் தோல் துவையல்

தேவையானவை: கமலா ஆரஞ்சு தோல் - கைப்பிடி அளவு, இஞ்சி - சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 1, உளுத்தம்-பருப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: ஆரஞ்சுப்பழத் தோலை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு அதை நன்கு வதக்கவும். இஞ்சியை தோல் சீவி நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம்-பருப்பை வறுக்கவும். வதக்கிய ஆரஞ்சுத் தோல், இஞ்சி, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்புடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும்.குறிப்பு: சூடான சாதத்தில் இந்தத் துவையலைப் போட்டு எண்ணெய் விட்டு சாப்பிட்டால், கமலா ஆரஞ்சு வாசனையுடன் ருசியாக இருக்கும். சுட்ட அப்பளம், தயிர் பச்சடி இதற்கு சூப்பர் காம்பினேஷன்.

கீரை பொரித்த குழம்பு

தேவையானவை: முளைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, முருங்கைக்கீரை (ஆய்ந்து பொடியாக நறுக்கியது) - தலா 1 கப், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு (இரண்டும் கலந்தது) - 1 கப், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், மிளகு - 6, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு செய்முறை: குக்கரில் துவரம்பருப்பு, பாசிப்பருப்பை வேக வைத்து 4 விசில் வந்ததும் இறக்கவும். கீரைகளை உப்பு சேர்த்து வேக விடவும். கடாயில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவல், சீரகம், மிளகை வறுத்து நைஸாக அரைத்து, வேக வைத்த கீரையுடன் கலக்கவும். அதில் வேக வைத்த பருப்பை சேர்த்துக் கொதிக்க வைக்கவும். கடுகு, உளுத்தம்-பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்துக் கொட்டி கலந்து இறக்கவும். குறிப்பு: கீரை பொரித்த குழம்பு வயதானவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள மாங்காய் இனிப்பு பச்சடி சரியான மேட்ச்!

இஞ்சி-மிளகு மோர்க்குழம்பு

தேவையானவை: வெண்டைக்-காய், மிளகு - தலா 10, புளித்த மோர் - அரை லிட்டர், காய்ந்த மிளகாய் - 1, இஞ்சி (நறுக்கியது) - சிறு துண்டு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவலை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து மோருடன் கலக்கவும். வெண்டைக்-காயை நீளத் துண்டுகளாக வெட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு வெண்டைக்காயை பொன்னிறமாகும் வரை வதக்கி, மோருடன் சேர்க்கவும். இந்தக் கலவையை அதிகம் கொதிக்க விடாமல் சூடாக்கவும். இதில் கடுகு, சீரகம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.குறிப்பு: 'தினமும் சாம்பாரா..?' என போரடிக்காமல் இருக்க இந்தக் குழம்பு! இதற்கு சுட்ட அப்பளம் அருமையான ஜோடி.

அவியல்

தேவையானவை: பீன்ஸ் - 10, கேரட், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் - தலா 1, பூசணிக்கீற்று - 1, அவரைக்காய் - 6, தேங்காய் துருவல் - 1 கப், மொச்சை - 100 கிராம், பச்சை மிளகாய் - 3, தயிர் - ஒரு கப், கறி-வேப்பிலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் மொச்சை, உப்பு சேர்த்து குக்கரில் போட்டு ஒரு விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும். தேங்காய் துருவலுடன் பச்சை மிள காயை சேர்த்து மிக்ஸியில் அரைத்து, அதனை தயிரில் விட்டுக் கலக்கவும். வேக வைத்த காய்கறிகளுடன் கலந்த தயிரைச் சேர்த்து கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் விட்டு, ஒருமுறை கொதித்ததும் இறக்கவும்.குறிப்பு: பொரித்த அப்பளம் இதற்கு சிறந்த காம்பினேஷன். இது அடைக்கு பொருத்தமான சைட் டிஷ்!

இஞ்சித் துவையல்

தேவையானவை: இஞ்சி - பெரிய துண்டு, காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - கைப்பிடி அளவு, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: இஞ்சியை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி, கறிவேப்பிலையை வதக்கவும். காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனியாக வறுக்கவும். வதக்கிய மற்றும் வறுத்த பொருட்களை ஒன்றாக்கி, அவற்றுடன் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.குறிப்பு: சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட, சுவையாக இருக்கும். இதற்கு சுட்ட அப்பளம் அருமையான காம்பினேஷன்.

வேப்பம்பூ பச்சடி(வேப்பம்பூ குழம்பு)

தேவையானவை: வேப்பம்பூ - ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - 1, கடுகு - அரை டீஸ்பூன், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, வெல்லம் (பொடித்தது) - 1 கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தைப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, வேப்பம்பூவை அதில் போட்டு லேசாக வறுக்கவும். மணம் வந்தவுடன் கரைத்த புளியை அதில் விட்டு வெல்லம், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும்.குறிப்பு: இதை குழம்பு போல சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

கலவைக்காய் கூட்டு

தேவையானவை: பாகற்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பரங்கிக்காய், பூசணிக்காய் - தலா 4 துண்டுகள், மொச்சை (தோலுரித்தது) - 1 கப், அவரைக்காய் - 4, வாழைக்காய் - அரை காய், பீன்ஸ் - 10, கேரட் - 1, தேங்காய் துருவல் - 1 கப், பச்சை மிளகாய் - 1, கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - டீஸ்பூன், தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு, செய்முறை: எல்லா காய்களையும் சுத்தம் செய்து, உப்பு சேர்த்து வேக விடவும், கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், தனியா, கடலைப்பருப்பை வறுத்து ஆற வைத்து, மிக்ஸியில் அரைக்கவும். வேக வைத்துள்ள காய்களுடன் அரைத்ததை விட்டு... கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதில் சேர்க்கவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.குறிப்பு: இது, சைட் டிஷ் தேவைப்படாத விட்டமின் கூட்டு!

இலை வடகம்

தேவையானவை: இட்லி அரிசி - 3 கப், பச்சரிசி - 1 கப், ஓமம் - 1 டீஸ்பூன், வாழை இலை - ஒன்று, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை. நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: இரண்டு அரிசியையும் ஒன்றாக ஊற வைத்து நைஸாக தோசை மாவு பதத்தில் அரைக்கவும். அதில் உப்பு, ஓமம், நல்லெண்ணெய், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கி புளிக்க வைக்கவும். வாழை இலையை நறுக்கி, அதன் பின்புறத்தில் மாவை பரவலாக ஊற்றி இலையை மூடவும். குக்கரின் அடிப்பாகத்தில் பயன்படுத்தப்படும் தட்டை, கடாயில் வைத்து, அது மூழ்காதவாறு தண்ணீர் விடவும். தட்டின் மீது மாவுடன் உள்ள வாழை இலையை வைத்து, மூடி வேக விடவும். 4-5 நிமிடங்கள் கழித்து வெந்ததும் வெளியே எடுக்கவும். ஆறியதும், வடகம்தானே வரும்போது எடுத்துப் பரிமாறவும்.குறிப்பு: தோசை போல இருக்கும் இந்த வடகம், எளிதில் ஜீரணம் ஆகும். இட்லி மிளகாய்ப்பொடி இதற்கு சிறந்த காம்பினேஷன்!

மோர் ரசம்

தேவையானவை: மோர் - அரை லிட்டர், மோர்மிளகாய் - 2, வெந்தயம், கடுகு, சீரகம், ஓமம் - தலா கால் டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன். எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், மோர்மிளகாய், சீரகம், ஓமம் தாளித்து, அதை மோருடன் சேர்த்துக் கலக்கவும். அரிசி மாவை தண்ணீர் விட்டுக் கரைத்து அதில் சேர்த்து, உப்பு போட்டுக் கலக்கி, அடுப்பில் ஏற்றவும். கொதிக்க ஆரம்பிக்கும் முன்பு அதனை இறக்கி விடவும்.குறிப்பு: இது, எளிதில் ஜீரணமாகக் கூடியது. வயிற்றுவலி, வாந்தி ஏற்படும் காலத்தில் சாப்பிட ஏற்றது.

ஓட்ஸ் தோசை

தேவையானவை: ஓட்ஸ் - 200 கிராம், நறுக்கிய வெங்காயம் - 1 கப், நறுக்கிய பச்சை மிளகாய் - 1, இஞ்சி (நறுக்கியது) - சிறிய துண்டு, கடுகு, சீரகம், தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: ஓட்ஸ§டன் உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும். அதை தோசை மாவில் போட்டு, கட்டியில்லாமல் கலக்கவும். தோசைக்கல்லில் தோசைகளாக வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். குறிப்பு: நார்சத்து நிறைந்த இந்த தோசை எளிதில் ஜீரணமாகக் கூடியது. இதற்கு இட்லி மிளகாய்ப்பொடி, சாம்பார், சட்னி நல்ல காம்பினேஷன்.

பருப்பு உருண்டைக் குழம்பு

தேவையானவை: துவரம்பருப்பு - 200 கிராம், சாம்பார்பொடி - 3 டீஸ்பூன், புளி - எலுமிச்சம்பழ அளவு, கடுகு, வெந்தயம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, எண்ணெய், உப்பு - தேவையான அளவு, செய்முறை: துவரம்பருப்பை ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். அதை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து, கரைத்து வடிகட்டிய புளிக் கரைசலை சேர்க்கவும். அதில் சாம்பார்பொடி சேர்த்துக் கலக்கி, உப்பு சேர்க்கவும். குழம்பு கொதித்து மணம் வரும்போது உருண்டைகளை அதில் மெதுவாகப் போடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.குறிப்பு: உருண்டைகளை சூடான சாதத்தில் போட்டு பிசைந்தும், குழம்பு தொட்டும் சாப்பிடலாம். உருண்டைகள் ஆவியில் வெந்துள்ளதால் பயமின்றி சாப்பிடலாம்.

கேரட் அல்வா

தேவையானவை: கேரட் - 4, பால் - 200 மில்லி, பாதாம்பருப்பு - 2, முந்திரிப்பருப்பு 6, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 4 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 1 கப்.செய்முறை: கேரட்டை தோல் சீவிக் கழுவவும். அதனை துருவி சூடான பாலில் வேக விடவும். வெந்நீரில் பாதாம்பருப்பை ஊற வைத்து, தோலுரித்து முந்திரிப்-பருப்புடன் சேர்த்து அரைக்கவும். இதை, வெந்து கொண்டிருக்கும் கேரட்டுடன் சேர்த்துக் கிளறவும். அதில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து, அடிபிடிக்காமல் கிளறி அல்வா பதம் வந்ததும் இறக்கவும்.குறிப்பு: இதே முறையில் பீட்ரூட் அல்வாவும் தயாரிக்க-லாம்.

முருங்கை இலை அடை

தேவையானவை: முருங்கை இலை - ஒரு கைப்பிடி அளவு, இட்லி அரிசி - 200 கிராம், பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 1 கப், இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 3 பல், காய்ந்த மிளகாய் - 3, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: அரிசியைத் தனியாக ஊற வைக்கவும். பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பைக் கலந்து தனியாக ஊற வைக்கவும். அரிசி ஊறியதும், அதனுடன் காய்ந்த மிளகாய், நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அது லேசாக மசிந்ததும், ஊற வைத்த பருப்புகளைச் சேர்த்து அரைக்கவும். உப்பு, பொடியாக நறுக்கிய முருங்கை இலையை அரைத்த மாவில் சேர்த்து, அடைமாவு பதத்தில் கலக்கவும். தோசைகல்லில் மாவை இட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு மிதமான தீயில் வேக விட்டு அடைகளாக சுட்டெடுக்கவும்.குறிப்பு: அவியல், இட்லி மிளகாய்ப்பொடி, வெண்ணெய்-வெல்லம் ஆகியவை இதற்கு தொட்டுக்கொள்ள சூப்பர் சைட் டிஷ்!

சுண்டைக்காய் குழம்பு

தேவையானவை: பிஞ்சு சுண்டைக்காய் - ஒரு கைப்பிடி அளவு, புளி - எலுமிச்சம்பழ அளவு, சாம்பார்பொடி - 3 டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், கடலைப்-பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, லேசாக நசுக்கிய சுண்டைக்காயைப் போட்டு நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து, அதில் சாம்பார்பொடி சேர்த்து வதக்கவும். கரைத்து வடிகட்டிய புளித் தண்ணீர், வதக்கிய சுண்டைக்காய், உப்பு சேர்த்துக் கலக்கி கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.குறிப்பு: பித்தம், சர்க்கரை அதிகமுள்ளவர்களுக்கு சுண்டைக்காய் எளிய வரப்பிரசாதம்.

ரவை - மிளகுப் பொங்கல்

தேவையானவை: ரவை - கால் கிலோ, நெய் - 100 கிராம், மிளகு - 10, சீரகம் - 1 டீஸ்பூன், வறுத்த முந்திரிப்பருப்பு - 10, இஞ்சி (நறுக்கியது) - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.செய்முறை: கடாயில் நெய் விட்டு, ரவையை பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் மீண்டும் நெய் விட்டு... இஞ்சி, மிளகு, சீரகம், கறிவேப்பிலையைத் தாளிக்கவும். அதில் ஒரு பங்கு ரவைக்கு ஒன்றரை மடங்கு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து, ரவையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறவும். வறுத்த முந்திரி சேர்த்துக் கிளறி இறக்கவும். குறிப்பு: பசியை உடனே அடக்கும்; எளிதில் ஜீரணமாகும் எளிய ரெசிபி! இதற்குத் தொட்டுக்கொள்ள வெங்காய சட்னி (அ) வேர்க்கடலை சட்னி சிறந்த காம்பினேஷன்.

மூலிகை சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - 200 கிராம், வெற்றிலை - 1, துளசி இலை - 10, இஞ்சி (நறுக்கியது) - சிறு துண்டு, ஓமம், மிளகுத்-தூள் - தலா கால் டீஸ்பூன், பூண்டு - 2 பல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: வெற்றிலை, துளசி, ஓமம், மிளகுத்தூள், பூண்டுப் பல், இஞ்சி எல்லாவற்றையும் நைஸாக மிக்ஸில் அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன் அரைத்த மூலிகை விழுது, உப்பு, தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும். மாவை சப்பாத்திகளாகத் தேய்த்து, தோசைக்-கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் தடவி சுட்டு எடுக்கவும்.குறிப்பு: துளசி, ஓமம், வெற்றிலை, இஞ்சி எல்லாம் சேர்ந்திருப்பதால் வாசனையுடன் இருக்கும். வயிறு 'ஸாரி' சொல்லும் காலத்துக்கு ஏற்ற உணவு.

வெஜிடபிள் உசிலி

தேவையானவை: நறுக்கிய பீன்ஸ், கேரட், முட்டைகோஸ் (எல்லாம் சேர்த்து) - ஒரு கப், துவரம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: நறுக்கிய காய்களை உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு வேக வைத்து, தண்ணீரை வடித்துக் கொள்ளவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற விட்டு, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கெட்டியாக ரவை பதத்தில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த பருப்புடன் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து, அதில் போட்டு மொறுமொறுப்பாக வரும் வரை கிளறவும். பதம் வந்ததும், வேக வைத்துள்ள காய்களைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.குறிப்பு: மோர்க்குழம்பு சாதத்துக்கு வெஜிடபிள் உசிலி சூப்பர் டூப்பர் மேட்ச்!

வாழைப்பூ வடை

தேவையானவை: வாழைப்பூ (ஆய்ந்து நறுக்கியது) - ஒரு கைப்பிடி அளவு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 100 கிராம், உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், இஞ்சி (நறுக்கியது) - ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை (நறுக்கியது) - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அவற்றுடன் இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வாழைப்பூவைப் போட்டு வதக்கவும். அரைத்த மாவில் வதக்கிய வாழைப்பூ, நறுக்கிய கறிவேப்பிலை, உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வடைகளைத் தட்டிப்போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.குறிப்பு: இதற்குச் சாம்பார் சிறந்த காம்பினேஷன். கீரை சேர்த்தும் செய்யலாம்.

பிரண்டை துவையல்

தேவையானவை: இளம் பிரண்டை - 10 துண்டுகள், உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, இஞ்சி - சிறு துண்டு, கறி-வேப்-பிலை - சிறிதளவு, எண்-ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: கடாயில் எண்ணெய்விட்டு, நறுக்கிய பிரண்டையைச் சேர்த்து வதக்கவும். உளுத்தம்பருப்பை வறுத்துக் கொள்ளவும். கறிவேப்பிலை, இஞ்சியைத் தனியாக வதக்கவும். வதக்கிய பிரண்டை, இஞ்சி, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்புடன் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். குறிப்பு: சூடான சாதத்துடன் இந்தத் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். சுட்ட அப்பளம், தயிர் பச்சடி இதற்கு கலக்கல் காம்பினேஷன். பிரண்டைக்கு பசியைத் தூண்டும் மருத்துவக் குணம் உண்டு.

இஞ்சி வெள்ளரிக்காய் பச்சடி

தேவையானவை: இஞ்சி (நறுக்கியது) - சிறிய துண்டு, வெள்ளரிக்காய், பச்சை மிளகாய் - தலா 1, தயிர் - 1 கப், தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.செய்முறை: இஞ்சி, தேங்காய் துருவல், பச்சை மிளகாயை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். வெள்ளரிக்காயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைத்த விழுது, நறுக்கிய வெள்ளரிக்காய், உப்பு ஆகியவற்றைத் தயிருடன் சேர்த்து நன்கு கலக்கினால்... அசத்தல் பச்சடி தயார்!குறிப்பு: மழைக் காலத்தில் கறிகாய் கிடைக்காமல் அல்லாடும் சமயத்தில் செய்வதற்கு ஏற்றது. பருப்புப் பொடி, துவையல் சாதத்துக்கு நல்ல காம்பினேஷன்.

வாழைத்தண்டு பொரியல்

தேவையானவை: வாழைத்தண்டு - ஒரு சாண் துண்டு, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், உப்பு, மோர் - தேவை-யான அளவு.செய்முறை: வாழைத்தண்டை வில்லைகளாக நறுக்கி, நார் எடுத்து, பொடியாக நறுக்கி மோர் கலந்த தண்ணீரில் போடவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கிய வாழைத்தண்டைப் பிழிந்து போட்டு நன்றாக வதக்கவும். வதங்கியதும்... இஞ்சித் துருவல், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து மிதமான தீயில் மூடி வேக வைக்கவும். இறக்குவதற்கு முன் கறிவேப்பிலை போட்டுக் கிளறவும்.குறிப்பு: வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகமிருப்பதால், அது நீரிழிவு நோய், சிறுநீரகக் கல் வராமல் தடுக்கும்.

மேத்தி கூட்டு

தேவையானவை: வெந்தயக்கீரை - 2 சிறிய கட்டு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - ஒரு கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, கடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, ஆய்ந்த வெந்தயக் கீரையைப் போட்டு வதக்கவும். துவரம்பருப்பு, பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வெந்த பருப்புடன் கீரை, அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்க விடவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, கலக்கி இறக்கவும்.குறிப்பு: வெந்தயக்கீரை குளிர்ச்சியானது. உடல் சூட்டினால் அவதிப்படுபவர்களுக்கு கண்கண்ட மருந்து!

தானியக் கஞ்சி

தேவையானவை: கோதுமை - 100 கிராம், கொள்ளு - 2 டீஸ்பூன், கேழ்வரகு, சோளம் - தலா ஒரு கப், சிவப்பு அரிசி, கம்பு, தினை - தலா 4 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு - தலா 6, பொட்டுக்கடலை - ஒரு சிறிய கப், வெல்லம் - 100 கிராம், ஏலக்காய் - 10, பால் - 200 மிலி.செய்முறை: தானியங்கள் மற்றும் பருப்புகளை தனித்-தனியாக வறுத்து, ஒன்றாகக் கலந்து மெஷினில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன், பொடித்த ஏலக்காய் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும். 6 டீஸ்பூன் மாவில், இரண்டு டம்ளர் தண்ணீர்விட்டு கரைத்துக் கொள்ளவும். இதனை அடுப்பில் மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். மணம் வந்ததும், காய்ச்சிய பாலை அதில் விட்டு, பொடித்த வெல்லத்தைச் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.குறிப்பு: மாவை மொத்தமாக அரைத்து வைத்துக் கொண்டு தேவைப்படும்போது கஞ்சி தயாரித்துக் கொள்ளலாம். விரத நாட்களுக்கும், உடனே பசி ஆற்றுவதற்கும் ஏற்ற கஞ்சி.

வெஜிடபிள் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - 200 கிராம், முள்ளங்கித் துருவல், கேரட் துருவல் - தலா ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்கறி துருவல்களைச் சேர்த்து நன்கு வதக்கவும். கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். மாவை சப்பாத்திகளாக தேய்த்து தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். அவற்றின் மீது, வதக்கிய காய்களைப் பரவலாகப் போட்டுச் சாப்பிடலாம். அல்லது வதக்கிய காய்களை மாவுடன் கலந்து சப்பாதிகளாகச் சுட்டும் சாப்பிடலாம்.குறிப்பு: இதற்கு சைட் டிஷ் தேவைப்படாது.

டைஜஸ்டிவ் மோர்

தேவையானவை: மோர் - அரை லிட்டர், புதினா - கைப்பிடி அளவு, இஞ்சி (நறுக்கியது) - சிறு துண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, பச்சை மிளகாய் - 1, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: புதினா, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதில் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, மோருடன் கலக்கவும். குறிப்பு: வெயில் காலத்திலும், செரிமானக் கோளாறு உள்ள சமயத்திலும் கைகொடுக்கும் சிம்பிள் ரெசிபி இது!

வெஜிடபிள் மோர்க்கூட்டு

தேவையானவை: முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல் - தலா ஒரு கப், மோர் - 200 மில்லி, பச்சை மிளகாய் - 1, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: துருவிய காய்களை உப்பு சேர்த்து வேக விடவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும். வேக வைத்த காய், அரைத்த விழுது ஆகியவற்றை மோருடன் சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதில் சேர்க்கவும். சிறிது கொதித்ததும், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு இறக்கவும்.குறிப்பு: மோர்க்கூட்டும் பொரித்த அப்பளமும் இணைபிரியா ஜோடி!

வேப்பம்பூ சாதம்

தேவையானவை: அரிசி - 250 கிராம், வேப்பம்பூ (காய்ந்தது) - ஒரு சிறிய கப், மோர்மிளகாய் - 2, கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: குக்கரில் அரிசி வைத்து உதிரியாக சாதம் வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... வேப்பம்பூ, கடுகு, மோர்மிளகாய் தாளிக்கவும். சாதத்தில் உப்பு சேர்த்து, தாளித்ததை அதில் கொட்டிக் கிளறினால்... மணக்க மணக்க சாதம் ரெடி! குறிப்பு: தயிர் பச்சடி, வெங்காய சாலட் இதற்கு சிறந்த காம்பினேஷன். வேப்பம்பூ, பித்தத்தை தணிய வைக்கும் அருமருந்து!

மூலிகை கஷாயம்

தேவையானவை: துளசி இலை - 10, அருகம்புல் - சிறிதளவு, கற்பூரவல்லி இலை - 10 (அ) ஓமம் - 2 டீஸ்பூன், சித்தரத்தை (நசுக்கியது) - 2 துண்டுகள், பனங்கல்கண்டு - ஒரு டீஸ்பூன், வெற்றிலை - 2, சீரகம் - 2 டீஸ்பூன், தேன் - 1 டீஸ்பூன், அரிசி திப்பிலி - சிறிதளவு, வேப்பம்பூ - 2 டீஸ்பூன்.செய்முறை: தேன் தவிர்த்த மற்ற பொருட்கள் அனைத்தையும் அரை லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விடவும். பாதி அளவுக்கு சுண்டியதும்... வடிகட்டி, ஆற வைத்து, மிதமான சூட்டில் தேன் கலந்து குடிக்கவும்.குறிப்பு: மழை, குளிர்காலங்களில் காலை, மாலை இருவேளையும் இந்தக் கஷாயத்தைக் குடித்தால்... சளி, இருமல் பக்கத்தில் நெருங்காது.
பயத்தங்கஞ்சி

தேவையானவை: பாசிப்பருப்பு - 1 கப், வெல்லம் (பொடித்தது) - அரை கப், பால் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன்.செய்முறை: கடாயில் நெய் விட்டு, பாசிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும். குக்கரில் ஒரு பங்கு பருப்புக்கு இரண்டு பங்கு தண்ணீர் விட்டுக் குழைய வேக வைக்கவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டவும். வெந்த பாசிப்பருப்பில், வெல்லக் கரைசலைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்து வரும்போது பாலை சேர்த்து, ஒருமுறை கொதித்ததும் இறக்கவும். அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும். இந்தக் கஞ்சி விரத நாட்களுக்கு ஏற்றது.

தவலை அடை

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: பச்சரிசியுடன் மிளகு, சீரகம் சேர்த்து ரவை போல பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து, அதில் தேங்காய் துருவலை சேர்க்கவும். அதனை லேசாக வதக்கி, உப்பு, தண்ணீர் சேர்க்கவும். அது கொதிக்க ஆரம்பிக்கும்போது பொடித்த ரவையை மெதுவாகப் போட்டுக் கிளறி, கெட்டியாக வரும்போது இறக்கவும். ஆறியதும், சிறுசிறு அடைகளாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

திரட்டுப்பால்

தேவையானவை: திக்கான பால் - 2 லிட்டர், பொடித்த வெல்லம் - ஒரு கப், நெய் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.செய்முறை: அடி கனமான பாத்திரத்-தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு, பால் நன்றாக சுண்டும் வரைக் கிளறவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, சுண்டிய பாலில் மெதுவாக ஊற்றிக் கிளறவும். இரண்டும் ஒன்றாகக் கலந்து சுருள வரும் பக்குவத்தில் நெய் விட்டுக் கிளறி, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும்.

திணை அரிசி பாயசம்

தேவையானவை: திணை அரிசி, பால், திக்கான தேங்காய்ப்பால், பொடித்த வெல்லம் - தலா ஒரு கப், நெய் - ஒரு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 10.செய்முறை: கடாயில் நெய் விட்டு திணை அரிசியை வறுத்து, குக்கரில் போட்டு ஒரு பங்கு அரிசிக்கு இரண்டரை பங்கு தண்ணீர் சேர்த்து 4 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும், குக்கரை திறந்து அதில் பால் ஊற்றவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, திணை அரிசியில் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து திக்காக வரும் சமயத்தில் தேங்காய்ப்பாலைச் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பை அதில் சேர்த்துப் பரிமாறவும்.

கேழ்வரகு வெல்ல அடை

தேவையானவை: பக்குவப்படுத்தப்பட்ட கேழ்வரகு மாவு (சுத்தப்படுத்தி, ஊற வைத்து, உலர்த்தி அரைக்கப்பட்ட மாவு) - ஒரு கப், பொடித்த வெல்லம் - அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - தேவையான அளவு.செய்முறை: கடாயில் நெய் விட்டு, கேழ்வரகு மாவு சேர்த்து லேசாக வறுத்து, அதை தனியாக வைக்கவும். அதே கடாயில் வெல்லத்தை ஒரு கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, கடாயில் விட்டு தேங்காய் துருவல், வறுத்த கேழ்வரகு மாவு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். பின்னர் தோசைக்கல்லில் சிறுசிறு அடைகளாகத் தட்டி இருபுறமும் நெய்விட்டு சுட்டு எடுக்கவும்.

பால் கொழுக்கட்டை

தேவையானவை: பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு (அரிசியை ஊற வைத்து, உலர்த்தி அரைத்த மாவு), பொடித்த வெல்லம் - தலா ஒரு கப், பால் - 3 கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.செய்முறை: அரிசி மாவில் உப்பு சேர்த்துக் கிளறி, அதன்மீது கொதிக்கும் நீர்விட்டு, கெட்டியாகக் கிளறி வைத்துக் கொள்ளவும். அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் பாலை ஊற்றவும். இதை அடுப்பில் வைத்து பால் கொதித்து வரும்போது அதில் உருட்டிய உருண்டைகளைப் போட்டு மீண்டும் கொதிக்க விடவும் (இதனை அகலமான பாத்திரத்தில்தான் செய்ய வேண்டும்). கொழுக்கட்டை வெந்து மேலே மிதந்து வரும்போது ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும்.

தேங்காய்ப்பால் முறுக்கு

தேவையானவை: பச்சரிசி - 4 கப், பாசிப்பருப்பு, திக்கான தேங்காய்ப்பால் - தலா ஒரு கப், சர்க்கரை - அரை டீஸ்பூன், எள், வெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: பச்சரிசியைக் கழுவி உலர்த்தவும். பிறகு, அரிசியையும், பாசிப்பருப்பையும் வாசனை வரும் வரை வறுக்கவும். இதை மெஷினில் கொடுத்து மாவாக அரைக்கவும். தேங்காய்ப்பாலில் சர்க்கரை சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும். மாவில் பெருங்காயத்தூள், உப்பு, எள், வெண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து, அதில் தேங்காய்ப்பாலை விட்டு முறுக்கு மாவு பதத்தில் நன்றாகப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, முள் முறுக்கு அச்சில் மாவை நிரப்பி, முறுக்குகளாகப் பிழிந்து சுட்டெடுக்கவும்.

அரிசி உப்புமா கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 2. கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.செய்முறை: அரிசி, துவரம்பருப்பு, சீரகத்தை மிக்ஸியில் ரவையாக பொடித்து தனியாக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதில் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதித்ததும், பொடித்து வைத்திருக்கும் ரவையைப் மெதுவாகப் போட்டுக் கிளறவும். முக்கால் பதம் வெந்ததும் இறக்கி விடவும். இளஞ்சூட்டில் இருக்கும்போது கொழுக்கட்டைகளாகப் பிடித்து, ஆவியில் வேக வைத்துப் பரிமாறவும்.

சீரக ரசம்

தேவையானவை: துவரம்பருப்பு, சீரகம், நெய், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, புளி - பாதி எலுமிச்சம்பழம் அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் புளி, உப்புடன் இரண்டு கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். துவரம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், மிளகு, கறிவேப்பிலையை மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும். புளித் தண்ணீர் கொதித்தவுடன், பொடித்து வைத்திருக்கும் மசாலா பொடியை அதில் சேர்த்து, நுரைத்துப் பொங்கி வரும்போது இறக்கவும். கடாயில் நெய் விட்டு கடுகு தாளித்து, ரசத்தில் கொட்டிக் கலந்து பரிமாறவும்.

பரங்கித் துவையல்

தேவையானவை: பரங்கிக்காய் (நறுக்கியது) - ஒரு கப், உளுத்தம்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 4, புளி - கொட்டைப்பாக்கு அளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய பரங்கிக்காயை வதக்கி ஆற வைக்கவும். வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், வதக்கிய பரங்கிக்காய், பெருங்காயத்தூள், உப்பு, புளியை மிக்ஸியில் ஒன்றாகப் போட்டு நைஸாக அரைத்து எடுத்தால் துவையல் தயார்!

அரிசி\தேங்காய் பாயசம்

தேவையானவை: பச்சரிசி - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன் நெய் - 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 10.செய்முறை: அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து வடித்து, அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டவும். அந்த பாகை கொதிக்க வைத்து, அரைத்த அரிசி-தேங்காய் துருவல் மாவைச் சேர்க்கவும். ஒன்றாகக் கலந்து திக்காக வரும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து சேர்க்கவும்.

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு

தேவையானவை: பிஞ்சுக் கத்திரிக்காய் - 10, புளி - எலுமிச்-சம்பழ அளவு, தேங்காய் துருவல் - கால் கப், தனியா, உளுத்-தம்-பருப்பு - தலா 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, அரிசி - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம், கடுகு - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு. எண்ணெய் - கால் கப், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெறும் கடாயில் தனியா, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, அரிசி, வெந்தயம், காய்ந்த மிளகாயை வறுக்-கவும். அதில் தேங்காய் துருவலைச் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, அதில் கத்திரிக்காயை இரண்டு இரண்டாகப் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள-வும். அதே கடாயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, கரைத்த புளியைச் சேர்க்கவும். அதில் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, புளித் தண்ணீர் கொதித்து வரும்போது அரைத்த மசாலாவை சேர்த்துக் கொதிக்க விடவும். வறுத்தெடுத்த கத்திரிக்காயை அதில் போட்டு, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

பிரண்டை துவையல்

தேவையானவை: பிரண்டை (நறுக்கியது) - கால் கப், தேங்காய் துருவல், எள், உளுத்தம்பருப்பு, மிளகு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்-பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 5, வெல்லம் - கொட்டைப் -பாக்கு அளவு, புளி - அரை எலுமிச்சம்பழ அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.செய்முறை: வெறும் கடாயில் எள்ளை வறுக்கவும். அதே கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாயை வறுக்கவும். பிரண்டையை எண்ணெயில் தனியாக வதக்கவும். பின்னர் வதக்கிய பிரண்டையையும், மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பிரண்டை துவையல் ரெடி!

புளி இஞ்சி

தேவையானவை: இளசான இஞ்சி (நறுக்கியது) - ஒரு கப், புளி - எலுமிச்சம்பழ அளவு, வெல்லம் - கொட்டைப்பாக்கு அளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, நறுக்கிய இஞ்சியை அதில் போட்டு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, இஞ்சியில் சேர்த்துக் கிளறவும். புளியும் இஞ்சியும் சேர்ந்து கெட்டியானதும், வெல்லம் சேர்த்து இறக்கவும். ஆறியதும் சுத்தமான பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.இது, அவசரத்துக்கு அனைத்துவிதமான சாப்பாட்டுக்கும் ஏற்ற டிஷ். ஜீரணத்துக்கு நல்லது.

பிடிகருணை மசியல்

தேவையானவை: பிடிகருணை - 4, துவரம்பருப்பு - கால் கப், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கடுகு - தலா கால் டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் - 3, காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: குக்கரில் அரிசி களைந்த நீரில் பிடி கருணையை தோலுடன் வேக வைக்கவும். தோலினை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கவும். துவரம்பருப்பில் மஞ்சள்தூள் சேர்த்து தனியாக வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு வதக்கி, கரைத்து வடிகட்டிய புளி நீரைச் சேர்க்கவும். புளி நீர் கொதிக்க ஆரம்பித்ததும் பிடிகருணைத் துண்டுகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு, வேக வைத்த துவரம்பருப்பு, உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து, இறக்கியதும் மசித்துப் பயன்படுத்த வும்.

மாங்காய்த்தோல் பச்சடி

தேவையானவை: காய்ந்த மாங்காய்த்-தோல் (சீஸன் காலத்-தில் பதப்படுத்-தப்பட்ட மாங்காய்) - கால் கப், தயிர் - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு. எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,செய்முறை: மாங்காய்த்தோலை தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, நன்றாக மசிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து அதில் கொட்டவும். மாங்காய் ஆறியதும் தயிர் சேர்த்துப் பரிமாறவும். மாங்காய்த்தோல் ஏற்கெனவே பதப்படுத்தப்பட்டிருப்பதால், அதில் உப்பு இருக்கும். எனவே, தனியாக உப்புச் சேர்க்கத் தேவையில்லை.

சுண்டைக்காய் வத்தல் குழம்பு

தேவையானவை: சுண்டைக்காய் வத்தல் - கால் கப், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, தேங்காய் துருவல் - கால் கப், புளி - எலுமிச்சம்பழ அளவு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், வெல்லம் - கொட்டைப்பாக்கு அளவு, கறிவேப்பிலை, கடுகு - சிறிதளவு. நல்லெண்ணய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாயை வறுத்து தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அதில் சுண்டைக்காய் வத்தலைப் போட்டுச் சிவக்க வறுக்கவும். புளியை ஒன்றரை கப் நீரில் கரைத்து வடிகட்டி அதில் ஊற்றி... உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். அது நன்றாகக் கொதித்ததும் அரைத்த மசாலாவைச் சேர்த்து வெல்லம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். சுண்டைக் காய் வத்தலில் ஏற்கெனவே உப்பு இருக்கும் என்பதால் குழம்பில் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்ப்பது நல்லது.

நெல்லிக்காய் துவையல்

தேவையானவை: முழு நெல்லிக்காய் - 5, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா 2, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல், எலுமிச்சைச் சாறு - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.செய்முறை: நெல்லிக்காயை கடாயில் லேசாக வேக வைத்து கொட்டையை நீக்கி வைத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், தேங்காய் துருவலில் எலுமிச்சைச் சாறு சேர்த்து மிக்ஸியில் அரைத்து, கடைசியாக நெல்லிக்காய், உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்தால் துவையல் ரெடி!.

உளுந்து பொங்கல்

தேவையானவை: முழு உளுந்து - அரை கப், பச்சரிசி - ஒரு கப், இஞ்சி (நறுக்கியது), மிளகு - தலா ஒரு டீஸ்பூன், சீரகம், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - கால் கப், உப்பு - தேவையான அளவு.செய்முறை: முழு உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்து நன்றாகக் களைந்து எடுக்கவும். அரிசியுடன் சேர்த்து ஒன்றுக்கு 3 பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். ஆறியதும், உப்பு போட்டு நன்றாகக் கலக்கவும். கடாயில் நெய் விட்டு பொடித்த மிளகு, சீரகம் தாளித்து அதில் நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து பொங்கலில் விட்டு நன்றாகக் கலக்கி பரிமாறவும். இது பெண் குழந்தைகளுக்கு ஏற்றது.

இனிப்பு அப்பம்

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், துவரம்பருப்பு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், வெல்லம் - அரை கப், எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பச்சரிசி, வெந்தயம், துவரம்பருப்பை ஒரு மணி நேரம், ஊற வைத்து அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக அரைக்க வும். நன்றாக அரைப்பட்டதும் அதில் வெல்லக் கரைசலை சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்கவும். இது இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும். அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கரண்டியால் மாவை ஊற்றி, அப்பங்களாகச் சுட்டெடுக்கவும்.

வெள்ளை பணியாரம்

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், உளுந்து - ஒரு டீஸ்பூன், திக்கான பால் - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: அரிசி, உளுந்து இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அதில் பால் சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். பிறகு, உப்புச் சேர்த்து, பணியாரச் சட்டியில் எண்ணெய் தடவி, மாவைக் கரண்டியால் ஊற்றி பணியாரங்களாக சுட்டு எடுக்கவும்.
இதற்கு காரச் சட்னி சூப்பர் காம்பினேஷன்.

சொஜ்ஜி அப்பம்

தேவையானவை : ரவை, தேங்காய் துருவல், பொடித்த வெல்லம் - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன். நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், - தேவையான அளவு.மேல்மாவுக்கு: மைதா ஒன்றரை கப், உப்பு - தேவையான அளவு.செய்முறை: மைதா மாவுடன் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பின்னர் அடி கனமான கடாயில் நெய் விட்டு, ரவையை சிவக்க வறுத்து, தேங்காய் துருவல் சேர்க்கவும். வெல்லத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். வெல்லக் கரைசலை ரவையில் சேர்த்து சுருள வரும் வரை கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்த்தால் பூரணம் ரெடி. மைதா மாவில் கொஞ்சம் எடுத்து சிறிய அப்பமாக இட்டு அதில் ரவைக் கலவையை உள்ளே வைத்து மூடி, சிறிய வடிவில் பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பூரணத்தை வைக்கும்போது வெளியில் வராமல் மூட வேண்டும். இது இரண்டு மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

குழாய் புட்டு

தேவையானவை: அரிசி மாவு - ஒன்றரை கப், தேங்காய் துருவல் - முக்கால் கப், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.செய்முறை: பதப்படுத்தபட்ட அரிசி மாவில் உப்பு சேர்த்து, சூடான நீர் விட்டுப் பிசறவும். புட்டு செய்யும் குழாயில் சுற்றிலும் நெய் தடவி, கொஞ்சம் அரிசி மாவை வைத்து, அதன்மேல் தேங்காய் துருவல் வைக்கவும். இப்படி அரிசி மாவு, தேங்காய் துருவல் என மாறி மாறி அடுக்காக வைத்து, வேக வைக்கவும். வெந்ததும் பலகாரம் எடுப்பதற்கென்றே இருக்கும் ஊசி கொண்டு குழாயிலிருந்து புட்டை வெளியே எடுக்கவும். நேந்திரம் பழத்தை துண்டுகளாக செய்து புட்டுடன் சேர்த்துச் சாப்பிடவும்.

ராகி களி

தேவையானவை: ராகி மாவு - ஒரு கப், தண்ணீர் - ஒன்றரை கப், உப்பு - ஒரு சிட்டிகை.செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். அதனுள் ஒரு மரக்கரண்டியைப் போடவும். கொதிக்கும் நீரில் ராகி மாவு, உப்பைப் போட்டு 2 அல்லது 3 நிமிடம் அப்படியே விட்டு விடவும். அடுப்பை அணைத்து, பாத்திரத்தைக் இறக்கி மரக்கரண்டியால் மாவை சூட்டுடன் வேகமாக கட்டியில்லாமல் கிளறவும். கிளறிய மாவை மீண்டும் அடுப்பில் வைத்து கொஞ்ச நேரம் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாத பதத்துக்கு மாவு வந்தால் களி ரெடி! அதை இறக்கிச் சூடாகப் பரிமாறவும். இதற்கு நெய்யுடன் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை தொட்டுச் சாப்பிடலாம்.

சோளம்\தட்டைப்பயறு சுண்டல்

தேவையானவை: சோளம் - ஒரு கப், தட்டைப்பயறு, வெங்காயம் (நறுக்கியது) - தலா கால் கப், பச்சை மிளகாய் - 2, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: சோளத்தில் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி மிக்ஸி விப்பரில் 2 முறை சுற்றி எடுத்து, தண்ணீரில் கழுவினால் தோல் நீங்கிவிடும். குக்கரின் முதல் அடுக்கில் 2 கப் தண்ணீரில் சோளத்தைப் போடவும். அடுத்த அடுக்கில் அரை கப் தண்ணீரில் தட்டைப் பயறை வைத்து 6 விசில் வந்ததும் இறக்கி இரண்டையும் வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள்தூள், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். அதில் வேக வைத்து வடிகட்டிய சோளம், தட்டைப்பயறு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். பிறகு, தேங்காய் துருவல், நறுக்கிய கொத்தமல்லி தூவிக் கிளறி, இறக்கி பரிமாறவும்.

சோள தோசை

தேவையானவை: சோளம், புழுங்கலரிசி - தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 3, சீரகம், தனியா - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: சோளத்தில் தண்ணீர் தெளித்துப் பிசறி, மிக்ஸி விப்பரில் ஒன்றிரண்டு முறை சுற்றி எடுத்து தண்ணீரில் கழுவினால் தோல் நீங்கிவிடும். தோல் நீங்கிய சோளத்துடன் புழுங்கலரிசியைச் சேர்த்தும், உளுத்தம்பருப்பை தனியாகவும் தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். சோளம், அரிசி உறியவுடன் சுத்தம் செய்து, அதில் தனியா, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைக்கவும். உளுத்தம்பருப்பை தண்ணீர் தெளித்து நைஸாக அரைக்கவும். அரைத்த மாவுகளை ஒன்றாக கலந்து 3 மணி நேரம் புளிக்க வைத்து, தோசைக்கல்லில் ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு தோசைகளாகச் சுட்டு எடுக்கவும்.

மசாலா பொரி

தேவையானவை: பொரி - ஒரு கப், பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு (பொடியாக நறுக்கியது) - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, சீரகம் - கால் டீஸ்பூன், மிளகு - 2, தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், மிளகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதில் மஞ்சள்தூள், காய்ந்த மிளகாய், பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பூண்டு போட்டு வறுக்கவும். அதில் பொரியை சேர்த்து ஒருமுறை வறுத்து இறக்கி, சூடாகப் பரிமாறவும். இது, மாலை நேர டிபனுக்கு உகந்தது.

ராகி ரொட்டி

தேவையானவை: ராகி மாவு - ஒரு கப், வெங்காயம் (நறுக்கியது) - கால் கப், பச்சை மிளகாய் - 2, வறுத்த வேர்க்கடலை (தோல் நீக்கியது) - ஒரு டேபிள்ஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன். கறிவேப்பிலை - சிறிதளவு. உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: அகலமான பாத்திரத்தில் ராகி மாவு, வெங்கா யம், கீறிய பச்சை மிளகாய், தனியாத்தூள், கறிவேப்பிலை, வேர்க்கடலை, உப்பு சேர்த்து சூடான தண்ணீர் விட்டு நன்றாகப் பிசையவும். அந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, எண்ணெய் தடவிய வாழை இலையில் வைத்து மெலிதாகத் தட்டவும். தோசைக்கல்லில் தட்டிய ரொட்டிகளைப் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு, நன்றாக வெந்தபின் எடுத்து சூடாகப் பரிமாறவும்.

திருவாதிரை களி

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், வேக வைத்த பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு கப், முந்திரிப்பருப்பு, திராட்சை - தலா 10, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: பச்சரிசியை கடாயில் வறுத்து மிக்ஸியில் ரவை போல பொடிக்கவும். கடாயில் தண்ணீர் விட்டு பொடித்த வெல்லம் போட்டுக் கரைத்து வடிகட்டவும். அதை கொதிக்க வைக்கவும். கொதித்து வரும்போது, பொடித்த அரிசியை சேர்த்துக் கிளறவும். அரிசி நன்கு வெந்ததும், வேக வைத்த பாசிப்பருப்பு, நெய் சேர்த்துக் கிளறவும். தனியாக நெய்யில் முந்திரிப்பருப்பு, திராட்சையை வறுத்து அதில் கொட்டி, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பாசிப்பருப்பு துவையல்

தேவையானவை: பாசிப்பருப்பு - கால் கப், பச்சை மிளகாய் - 3, புளி - கொட்டைப்பாக்கு அளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன். எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.செய்முறை: பாசிப்பருப்பு ஒரு மணி நேரம் ஊற வைத்து வடிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பருப்புத் துவையலில் சேர்த்துப் பரிமாறவும்.
நன்றி: அவள் விகடன் மற்றும் சில வார பத்திரிக்கைகள்

Tuesday 19 January 2010

Thursday 30 April 2009

ப‌டித்த‌தில் பிடித்த‌து:

தேங்காய் மலபார் கூட்டு தேவையானவை: தேங்காய் துருவல் - அரை கப், காய்கறிகலவை - 2 கப், தனியா - 2 டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பச்சைமிளகாய் - 3 (அ) 4, சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய், உப்பு - சிறிதளவு.

செய்முறை: கடாயில் காய்கறிகளை வேக வைக்கவும். மிக்ஸியில் தேங்காயைப் போட்டு, தனியா, இஞ்சி, சீரகம், பச்சைமிளகாயைப் போட்டு அரைக்கவும். வெந்த காய்கறிகளில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டவும்.

தேங்காய்-தக்காளி கூட்டு தேவையானவை: தேங்காய் துருவல் - ஒரு கப், மீடியமான தக்காளி - 4, பச்சைமிளகாய் - 4, வெங்காயம் - 1, சீரகம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, தனியாத்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: தேங்காய் துருவல், வெங்காயம், காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் தக்காளி, பச்சைமிளகாய் துண்டுகளைப் போட்டு, 2 கப் தண்ணீர் விட்டு வேக விடவும். தனியாத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து, தக்காளியை நன்கு மசிய விட வேண்டும். இது, சாதத்துடன் கலந்து சாப்பிட அருமையாக இருக்கும்.


தேங்காய்ப் பால் - வெஜிடபிள் உருண்டை குழம்பு தேவையானவை: கெட்டியான தேங்காய்ப் பால் - ஒரு கப், நறுக்கிய அவரை, வாழைக்காய், கத்திரிக்காய், பட்டாணி சேர்ந்த கலவை - 2 கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

உருண்டைக்கு: பொடியாக நறுக்கிய வெந்தய கீரை (அ) முளைக்கீரை, கடலை மாவு, பாலக்கீரை - தலா அரை கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

கிரேவிக்கு: தேங்காய் துருவல் - ஒரு கப், கொத்தமல்லி இலை - அரை கப், சோம்பு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் - 4, தனியாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன்.

செய்முறை: வெந்தயகீரை, பாலக்கீரை, கடலைமாவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியற்றை லேசாக தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து உருண்டைகளாக உருட்டி பொரித்துக் கொள்ளவும்.

தேங்காய்துருவல், கொத்தமல்லி, சோம்பு, பச்சைமிளகாய் ஆகியற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்து இதனுடன் தனியாத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்கறிகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, பொரித்து வைத்திருக்கும் உருண்டைகளைப் போட்டு, தேங்காய்ப் பாலை விட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும். இறக்கும்போது விருப்பப்பட்டால் எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.

தேங்காய் - எள் பொடி
தேவையானவை: கடலைப்பருப்பு - அரை கப், உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், எள் - ஒரு டேபிள்ஸ்பூன், கொப்பரை துருவல் - ஒரு கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, காய்ந்த மிளகாய் - 5 (அ) 8.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, எள், பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய் போட்டு சிவக்க வறுக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், கொப்பரை துருவல், உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து எடுக்கவும். சுவையான இந்தத் தேங்காய் - எள் பொடியை சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் அருமையாக இருக்கும்.

தேங்காய் சட்னி ரைஸ்
தேவையானவை: தேங்காய் துருவல் - ஒரு கப், பச்சைமிளகாய் - 3, பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், புளி - கொட்டைப்பாக்கு அளவு, பூண்டு - 3 பல், காய்ந்த மிளகாய் - 2, சாதம் - 2 கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - அரை கப், கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: மிக்ஸியில் புளி, மிளகாய், தேங்காய் துருவல், பூண்டு, கொத்தமல்லி எல்லாவற்றையும் விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை வறுத்துக் கொள்ளவும். இத்துடன் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி, அரைத்து வைத்துள்ள விழுதையும் போட்டு, 5 நிமிடம் கிளறவும். இந்தக் கலவையில் சாதத்தை போட்டுக் கலக்கி, கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

என் ம‌ம்மி‍‍ கைப்ப‌க்குவ‌த்தில்:

மோர் கூட்டு:
காய் வ‌கைகள்:
வாழைத்த‌ண்டு / வாழைக்காய், முட்டைகோஸ், சேனைக்கிழ‌ங்கு, சௌ சௌ

1/ காய்க‌ளில் எதாவ‌து ஒன்று எடுத்து, பொடியாக‌ நறுக்கி வேக‌ வைத்து கொள்ள‌வும் (உப்பு சேர்த்து)
2/ தேங்காய் துருவ‌ல், ப‌ச்சை மிள‌காய், சிவ‌ப்பு மிள‌காய், கொத்த‌ ம‌ல்லி, சீர‌க‌ம், எல்லாவ‌ற்றையும் போட்டு அரைத்து, வேக‌ வைத்துள்ள‌ காய்க‌ளில் போட்டு கொதிக்க‌விட‌வும்
3/ இர‌ண்டு அல்லது மூன்று க‌ர‌ண்டி த‌யிர் விட்டு ந‌ன்றாக‌ க‌ல‌க்க‌வும்
4/ இற‌க்கி வைத்து - தேங்காய் எண்ணையில், க‌டுகு, பெருங்காய‌ம், க‌றிவேப்பிலைதாளித்து சேர்க்க‌வும்

பாக‌ற்காய் அல்லது சுண்டைக்காய் பொரித்த‌ குழ‌ம்பு:
முத‌ல் வகை:1/ புளியை ஊற‌ வைத்து, க‌ரைத்து கொள்ள‌வும்
2/ இலுப்ப‌ச் ச‌ட்டியில் எண்ணை (ந‌ல்ல‌ எண்ணை இருந்தால்) விட்டு, உளுந்து, கரிவேப்பிலை, பாக‌ற்காய்/சுண்டைக்காய் போட்டு வ‌த‌க்கி, குழ‌ம்பு பொடி பொட்டு ந‌ன்றாக‌ வ‌த‌க்கவும்.
3/ பிற‌கு உப்பு போட்டு, க‌ரைத்து வைத்துள்ள‌ புளி தண்ணீரை விட்டு, பெருங்காய‌ம் போட்டு ந‌ன்றாக‌ கொதிக்க‌ விட‌வும்
4/ க‌டைசியில் அரிசி மாவு க‌ரைத்து (நீர்க்க‌ இருந்தால் ம‌ட்டும்) இற‌க்க‌வும்.
(பாக‌ற்காய் க‌ச‌க்காம‌ல் இருக்க‌ துண்ட‌மாக‌ ந‌றுக்கி அரை ம‌ணி மோரில் ஊற‌ வைக்க‌வும்)

இர‌ண்டாம் வ‌கை:1/ புளியை ஊர‌ வைத்து, க‌ரைத்து கொள்ள‌வும்
2/ உளுந்து, சிக‌ப்பு மிள‌காய், மிள‌கு ‍‍ எண்ணை விட்டு வ‌றுத்து, தேங்காய் துருவ‌ல் சேர்த்து அரைத்து கொள்ள‌வும்
3/ பாக‌ற்காய் அல்லது சுண்டைக்காயை வ‌த‌க்கி, புளி நீரில் உப்பு போட்டு ‍ 5 முத‌ல் 10 நிமிட‌ம் வ‌ரை கொதிக்க‌ விட‌வும்
4/ அரைத்த‌ க‌ல‌வையை + பெருங்காய‌ம் சேர்த்து ந‌ன்றாக கொதிக்க‌ விட‌வும்.
5/ நீர்க்க‌ இருந்தால், மாவு க‌ரைத்து விட‌லாம்.
6/ இற‌க்கி தாளிக்க‌வும் (க‌டுகு, க‌றிவேப்பிலை)


எரிசேரி 1:
1/ ப‌ய‌த்த‌ம் ப‌ருப்பு 1/2 க‌ப், துவ‌ர‌ம் ப‌ருப்பு 1/2 க‌ப் எடுத்து வேக‌ வைத்து கொள்ள‌வும்
2/ முருங்கை காய் த‌னியாக‌ (1/2 வேக்காடு) வேக‌ வைக்க‌வும்
3/ சிவ‌ப்பு மிள‌காய், தேங்காய் துருவ‌ல், சீர‌க‌ம் அரைத்து கொள்ள‌வும்.
4/ வேக‌ வைத்த‌ ப‌ருப்பில் உப்பு போட்டு, அரைத்த‌ விழுதையும் சேர்த்து, முருங்கைக்காயையும் சேர்த்து 5 முத‌ல் 10 நிமிட‌ம் வ‌ரை கொதிக்க‌ விட்டு இற‌க்க‌வும்.
5/ தேங்காய் எண்ணையில் க‌டுகு, க‌றிவேப்பிலை தாளித்து போட‌வும்.

எரிசேரி 2:
1/ சேணை கிழ‌ங்கு/க‌ருணை கிழ‌ங்கு/வாழைக்காய் எதாவ‌து ஒன்று எடுத்து த‌னியாக‌ வேக‌ வைத்து கொள்ள‌வும்.
2/ துவ‌ர‌ம் ப‌ருப்பு வேக‌ வைத்து, காயோடு சேர்த்து கொதிக்க‌ விட‌வும்.
3/ த‌னியா, சிவ‌ப்பு மிள‌காய், தேங்காய் துருவ‌ல், சீர‌க‌ம், மிள‌கு அரைத்து சேர்க்க‌வும்.
5/ தேங்காய் எண்ணையில் க‌டுகு, க‌றிவேப்பிலை தாளித்து போட‌வும்.

(தேவையான‌ புளி க‌ரைத்தும் செய்ய‌லாம்)

க‌ருணை/சேனை ம‌சிய‌ல்:1/ க‌ருணை/சேனை வேக‌ வைத்து கொள்ள‌வும்.
2/ புளி க‌ரைத்து + இலுப்ப‌ ச‌ட்டியில் எண்ணை விட்டு, பெருங்காய‌ம், க‌டுகு, ப‌ச்சை மிள‌காய், இஞ்சி க‌றிவேப்பிலை தாளித்து புளி த‌ண்ணியுட‌ன் கொதிக்க‌ விட‌வும்.
3/ கொதித்த‌தும், காய்க‌ளை ம‌சித்து மீண்டும் கொதித்த‌வும் இற‌க்க‌வும்.

Friday 31 October 2008

த‌க்காளி தொக்கு

தேவையான‌வை:

த‌க்காளி ப‌ழுத்த‌து 1 கிலோ
மிள‌காய் தூள் ‍ 75 - 100 கிராம்
ம‌ஞ்ச‌ள் தூள் 25 கிராம்
வெந்தய‌ப் பொடி ‍‍ 20 கிராம் (!?)
ந‌ல்லெண்ணை ‍ 50 கிராம் (ஹ்ம்ம் என்ன‌ செய்ய‌... எங்க‌ ஊருல‌ இது இல்ல‌, அதுக்காக‌ செய்யாம‌ விட‌ முடியுமா?, எதாவ‌து கார்ன் ஆயில் தான்)
க‌டுகு, வெந்த‌ய‌ம், உளுந்து ‍ தாளிக்க‌

செய்முறை:

1. த‌க்காளி ய‌ ந‌ல்லா ந‌றுக்கி (க‌ட் ப‌ண்ணி) வைத்து கொள்ள‌வும்
2. எண்ணை ய‌ காய‌ வைத்து, க‌டுகு, உளுந்து போட்டு தாளித்து, வெந்தய‌ம் போட்டு சிவ‌க்க‌ வ‌றுத்து, த‌க்காளிய‌ போட்டு வ‌த‌க்க‌வும். ‍ - 10 நிமிட‌மாவ‌து
3. ம‌ஞ்ச‌ள் பொடி, மிள‌காய், உப்பு, போட்டு, ம‌றுப‌டியும் வ‌த‌க்க‌வும் - 10 நிமிட‌மாவ‌து
4. த‌ண்ணீர் வ‌ற்றி, எண்ணை பிரிந்து வரும் போது, வெந்த‌ய‌ பொடி போட்டு கிள‌றி இற‌க்க‌வும் :)

த‌க்காளி தொக்கு த‌யார்.

Friday 22 August 2008

ஸ்ரீஜெயந்தி ...

பொட்டுக்கடலை சீடை
தேவையானவை: பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய், தேங்காய்துருவல், எள்ளு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் அரிசி மாவை கை பொறுக்கும் சூட்டில் லேசாக வறுத்துக் கொள்ளவும். அதனுடன், பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், தேங்காய் துருவல், எள்ளு, உப்பு, பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகப் பிசறி, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, சிறு சீடைகளாக உருட்டி வைக்கவும். ஈரம் காய்ந்ததும் எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
மாவை வறுப்பதால் சீடை வெடிக்காமல் இருக்கும்.

காரத்தட்டை
தேவையானவை: பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு - ஒரு டீஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்த மாவு, வெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் - 5, நறுக்கிய கொத்தமல்லி - சிறிது, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசிமாவை கை பொறுக்கும் சூட்டில் லேசாக வறுக்கவும். பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பை விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் வறுத்த அரிசிமாவு, பொட்டுக்கடலை மாவு, உளுத்த மாவு, வெண்ணெய், பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து வெள்ளைத் துணியில் மெல்லியதாகத் தட்டி எண்ணெயில் போட்டு கரகரப்பாகப் பொரித்தெடுக்கவும்.
விருப்பப்பட்டால் வேர்க்கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்து மாவில் சேர்த்துக் கொள்ளலாம்.

காசி அல்வா
தேவையானவை: துருவிய வெள்ளைப்பூசணி - 4 கப், சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - கால் கப், முந்திரி துண்டுகள் - சிறிது.
செய்முறை: வெள்ளைப்பூசணி துருவலை ஒரு துணியில் நன்றாக மூட்டை கட்டி, நீரை கெட்டியாகப் பிழிந்து வடித்துக் கொள்ளவும். பிறகு கடாயில் நெய் விட்டு, பூசணி துருவலைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி சர்க்கரையை சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து சுருண்டு வரும் பக்குவத்தில் ஏலக்காய்த்தூள், முந்திரி துண்டுகளை சேர்த்து இறக்கவும்.

மனோகரம்
தேவையானவை: பதப்படுத்தப்பட்ட அரிசிமாவு - 4 கப், வறுத்துப் பொடித்த உளுத்தமாவு - முக்கால் கப், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், வெல்லம் - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன். உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசிமாவுடன் உப்பு, வெண்ணெய் சேர்த்துப் பிசறி, தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை சிறிது எடுத்து தேன்குழல் அச்சில் போட்டு எண்ணெயில் முறுக்குகளாகப் பொரித்தெடுக்கவும். இதேபோல் எல்லாவற்றையும் செய்து கொள்ளவும்.

மற்றொரு கடாயில் வெல்லத்தைப் போட்டு ஒரு கரண்டி தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். வெல்லம் கொதித்து கரைந்ததும் அதில் உள்ள மண்ணை வடிகட்டி மீண்டும் கடாயில் வைத்து கெட்டிப் பாகாகக் காய்ச்சவும் (ஒரு ஸ்பூனில் எடுத்து தண்ணீரில் போட்டு, அந்த முத்தை எடுத்துத் தட்டில் போட்டால் 'டங்' என்று சத்தம் கேட்கும். இதுவே சரியான பதம்). பிறகு அடுப்பை அணைத்து விட்டு, பொரித்த முறுக்குகளை போட்டு கலந்து வைக்கவும்.

thanks to Aval Vikatan

Thursday 10 July 2008

கறிவகைகள்/பச்சடி வகைகள்:

பருப்புசிலி:

எங்க பாட்டி பருப்புசிலி செய்றச்ச எண்ணை விடுறத பாத்தா, Dietitian கண்ணுல இருந்து ரத்தமே வரும்... ஆனா சில விஷயத்துக்கு -லாம் நாக்கே முடிவு எடுக்கும்..

ஆனா பருப்புசிலி இந்த வழில செஞ்சி பாரு னு எனக்கு சொன்னாங்க... 2 நல்ல விஷயம் இருக்கு இதுல..

1. எண்ணை குறைவு.
2. நேரம் சேமிப்பு

பருப்பு இட்லி க்கு:
துவரம் பருப்பு - 3/4 கப்
கடலைப் பருப்பு - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 5-6 வரை (உங்க வயித்தோட சக்திய பொருத்து)

செய்முறை:
பருப்புகள் இரண்டையும் ஒரு இரண்டு-மூன்று மணி நேரம் ஊறவைத்து, அரைக்கும் பொழுது, 1 ஸ்பூன் பெருங்காயம், கொஞ்சமா உப்பு சேத்து கட்டியான பதத்துக்கு அரைத்து எடுத்துக்கோங்க. (வ்டைக்கு அரைப்போம் ல.. அதே பதம் தான்!),

இத இட்லி தட்டு ல ஊத்தி இட்லியா எடுத்து வச்சிக்கோங்க (ஃப்ரீஸர் ல ஒரு Ziplock கவர் ல போட்டு வச்சிக்கலாம்).

வேணும் போது, ஒரு 1/2 மணிக்கு முன்னாடி வெளில எடுத்து உதிர்த்து கொள்ளலாம். (மிக்ஸில ஒரு சுத்து விட்டாலும் ஆச்சு, இந்த இட்லிய வச்சே, பருப்பு உருண்டை குழம்பும் செய்வேன், நான் ரொம்ப சோம்பேறி தெரியுமோ?, பருப்பு உருண்டை குழம்பு கதைய அப்புறம் பாக்கலாம்)

இப்போ எந்த பருப்பு உசிலினாலும் நாம செய்யலாம் ல?? உதாரணத்துக்கு:

பீன்ஸ் பருப்புசிலி:
1/2 KG பீன்ஸ்
2 ஸ்பூன் கடலை பருப்பு
2 ஸ்பூன் உளுந்து பருப்பு
கடுகு, எண்ணை, கறிவேப்பிலை - தாளிக்க
பருப்பு இட்லி - 3 - 4 வரை (நீங்க பெரிய இட்லி யா வாத்து இருந்தா.. நான் எப்படி அளவு சொல்றது ல?, நான் mini இட்லி தட்டுல செஞ்சி வைக்குறேன், பாக்கவும் நல்லா இருக்கும் ல)

செய்முறை:
முதலில் கொஞ்சமா தண்ணி விட்டு பீன்ஸ உப்பு போட்டு வேக விடுங்க.கடாயில் எண்ணை விட்டு, காய்ந்ததும், அதில் கடுகு, பருப்பு வகைகளை போட்டு, கறிவேப்பிலை பொட்டு தாளித்ததும், பருப்பு இட்லிகளை உதிர்த்து போட்டு வதக்கவும், கிளறி கொண்டே இருக்கணும் (இல்லனா அடி பிடித்து, என் நிறத்துல தான் உங்களுக்கு பருப்புசிலி வரும்), நல்லா பொன் நிறமாகும் பொழுது, அதில் வேக வைத்த பீன்ஸ போட்டு துளி உப்பு போட்டு, கிளறி இறக்கணும்.

பீன்ஸ் பருப்புசிலி தயார்.

****



கத்திரிக்காய் கொத்சு:

பெரிய அளவு கத்திரிக்காய் - 1
புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
பெருங்காயம், கடுகு, எண்ணை - தாளிக்க
பச்சை மிளகாய் - 3

கத்திரிக்காயை சுட்டு (oven இருந்தா - PRE HEAT - 180-230 DEGREE ல 10 Mins, எண்ணை தடவி 10-15 mins) தோலை உறித்து பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணை விட்டு கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளித்து, புளி ஜலத்தை விட்டு கொதித்ததும், சுட்டு பிசைந்த கத்திரிக்காயயும் போட்டு கொதித்தும் கொத்தமல்லி தழை போட்டு பரிமாறவும் :)



தக்காளி - தேங்காய் பச்சடி:

தேவையானவை:
தயிர் - 1 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
தக்காளி 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - கொஞ்சம்
உப்பு
தாளிக்க - எண்ணை

செய்முறை:

இஞ்சி, மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி, தேங்காயோடு உப்பு சேர்த்து தயிருடன் கலந்து, தாளித்து (கடுகு, உளுந்து போட்டு தான்), கொத்தம்ல்லி தழையுடன் பரிமாறவும் (வேண்டுமானால் - ஃப்ரிட்ஜில் வைத்து)

கத்தரிக்காய் பச்சடி:

தேவையானவை:
தயிர் - 1 கப் (புளிக்காதது)
சின்னதா கத்திரிக்காய் - 4-5
தேங்காய் துருவல் - 2-3 ஸ்பூண்
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 2
உப்பு
தாளிக்க - எண்ணை

செய்முறை:

கத்தரிக்காயை மெல்லியதாக நறுக்கி, பூண்டை நசுக்கி - இரண்டையும் எண்ணையில் வதக்கி ஒரு டிஷ்யூ பேப்பர் போட்டு எண்ணையை எடுத்து விடுங்கள். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து கொள்ளவும். தயிருடன் இரண்டையும் கலந்து உப்பு சேர்த்து தாளித்து பரிமாறவும்.